விடுபட்ட ஆதார் எண் சேர்க்கை பணி துவங்கியது! ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஜரூர்

மதுரை : மதுரை மாவட்டத்தில் தவறுகளற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில் விடுபட்ட ஆதார் எண் சேர்க்கை பணி துவங்கியுள்ளது.



இம்மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதிகளில் 24.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆதார், அலைபேசி எண், இமெயில் முகவரியை சேர்க்கும் பணி நடந்தது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று இப்பணியில் ஈடுபட்டனர். ஏப்., மே மாதங்களில் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் எதிரொலியாக, மாவட்டத்தில் 78 சதவீத ஆதார் எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்ற போது பூட்டியிருந்த வீடுகள் ஆதார் எண் பெற முடியவில்லை.

வீடுகளில் ஏற்கனவே இருந்தவர்கள் காலி செய்து சென்று விட்டனர். இந்த வகையில் மாவட்டத்தில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதை சரி பார்க்கும் வகையில் சிலநாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இப்பட்டியல் நகல் கொடுக்கப்பட்டு, அதை சரிபார்த்து தெரிவிக்க கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையில் தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, கலெக்டர் சுப்பிரமணியன் மேற்பார்வையில் விடுபட்ட ஆதார் எண்களை சேர்க்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.

தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் செப்.15ல் வெளியாக வாய்ப்புள்ளது. இதை மனதில் வைத்து விடுபட்ட ஆதார் எண்களை சேர்க்கும் பணி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. இதன் மூலம் தவறே இல்லாத நுாறு சதவீத சரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.