பணிநிரவல் செய்வதால் பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம்

நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால் கலக்கமடைந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

           அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது 6 முதல் 8 ம் வகுப்பு வரை 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கிட வேண்டும்.

அப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 170 உபரி பணியிடங்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்களை பணிநிரவல் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. துாரம் அதிகமுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுவார்களோ என்று பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் சங்க செயலாளர் குமார் கூறியதாவது: ஏற்கனவே குறைவான ஊதியத்தில் பணிபுரிகிறோம். அதிக துாரம் உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தால் பயண செலவு அதிகரிக்கும். துாரத்தை கணக்கிட்டு பணியிடம் வழங்க வேண்டும், என்றார்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “முடிந்தவரை பகுதிநேர ஆசிரியர்களை துாரம் குறைந்த பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.