மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: விஞ்ஞானி வி.டில்லிபாபு

மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்று, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி வி.டில்லிபாபு கேட்டுக் கொண்டார்.

தூய அல்ஃபோன்சஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் எல்லையில்லா பொறியாளர்கள்-பெங்களூரு கிளை சார்பில் பெங்களூரு, பென்சன் டவுனில் உள்ள பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பள்ளியின் அறிவியல் மன்றத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானி வி.டில்லிபாபு தொடக்கிவைத்தார்.
எல்லையில்லா பொறியாளர்கள்-பெங்களூரு கிளை சார்பில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்குப் பாடங்களை போதிக்கும் வகையில் சனிக்கிழமை பாடம் என்ற திட்டத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானி ஏ.மஞ்சுநாத் தொடக்கிவைத்தார்.
இந்த விழாவில் பள்ளியின் உதவி மேலாளர் அருள்தந்தை ஆண்டிக் சந்தோஸ், தலைமை ஆசிரியை அருட்சகோதரி ரூபினா, புலவர் கார்த்தியாயினி, ஆசிரியைகள் சுனிதா மேரி, பியூலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் எரிமலை, மைய எதிர் விசை, செயற்கைக்கோள்கள், காற்றாடி மின்சக்தி, வெப்பக்கடத்தல் ஆகியவற்றை சித்திரிக்கும் அறிவியல் மாதிரிகளின் செய்முறை விளக்கத்தை நிகழ்த்திக் காட்டினர்.
சுற்றுபுறத் தூய்மையை வலியுறுத்தும் நாடகத்தையும் மாணவ, மாணவிகள் நடித்துக் காட்டினர்.
விழாவில் விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியது:
விண்வெளி மற்றும் விமானத் துறையில் இந்தியாவின் சாதனைகள் மகத்தானது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நமது தொழில்நுட்பத் திறனை பறைசாற்றக் கூடியதாகும்.
இளம் வயதிலேயே அறிவியல் மீது நாட்டம் கொள்வது நல்லது. செய்முறைகள் மூலம் அறிவியல் வினைகளை மாணவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினால், அறிவியல் துறையில் இந்தியா அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கான முதல்படியாக அது அமையும். மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை அதிகரிப்பது நமது நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு நல்லதாகும். மாணவர்கள் ஆர்வமுடன் அறிவியலை கற்று தேர்ச்சி பெற வேண்டும்.
மாணவர்கள் அகில இந்திய அளவில் அறிவியல் போட்டிகளில் பங்கேற்க எங்கள் அமைப்பின் சார்பில் பொருளாதார உதவிகள் செய்யப்படும். சனிக்கிழமை பாடம் திட்டம் பெங்களூரில் பிற பள்ளிக் கூடங்களிலும் செயல்படுத்தப்படும் என்றார்.
பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் நாகராஜ், கிரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.