ஆசிரியர் கல்வியில் 'சிலபஸ்' இழுபறி

சமச்சீர் பாடத்திட்ட பிரச்னையை போல், பி.எட்., பாடத்திட்டத்திலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு, பி.எட்., மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற குழப்பம் உருவாகி உள்ளது. பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு தேசியக் கல்வியியல் கவு
ன்சிலான - என்.சி.டி.இ., புதிய பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, பி.எட்., இரண்டாண்டு படிப்பாக மாற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர், 2ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. அதனால், ஆகஸ்டில் முடிக்க வேண்டிய மாணவர் சேர்க்கை உண்டா, இல்லையா என்ற குழப்பம் உருவாகி உள்ளது.
சமச்சீர் கல்வி வழக்கில், நான்கு ஆண்டுகளுக்கு முன், பள்ளிகள் திறந்த பிறகும், எந்த பாடத்திட்டம் என்று முடிவாகாமல் குழப்பம் ஏற்பட்டது. அதே போல் தற்போது, 690 கல்லுாரிகளில், 75 ஆயிரம் இடங்களில், மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டிய நிலையில், பாடத்திட்டமே தெரியாமல், ஆசிரியர் கல்வியியல் பல்கலையும், உயர்கல்வித் துறையும் மெத்தனமாக உள்ளது.
* மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றோ, புதிய பாடத்திட்டத்தை பின்பற்றக் கூடாது என்றோ, உயர் நீதிமன்றம் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஆனால், ஆசிரியர் பல்கலையும், உயர்கல்வித் துறையும், மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை.
* கல்வியியல் பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. தற்காலிக நிர்வாக குழுவில், உயர்க்கல்வி முதன்மைச் செயலரே முடிவு எடுக்கும் நிலையில் உள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
* 'அனைத்து முடிவுகளையும் அரசு எடுக்க வேண்டும்' என, உயர்கல்வித் துறை, கல்லுாரி இயக்ககம், கல்வியியல் பல்கலை அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர்.
* தனியார் கல்லுாரிகள் தான் வழக்குப் போட்டுள்ளன. ஆனால், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் மற்றும் சில சிறுபான்மை கல்லுாரிகள் சார்பில், 'புதிய பாடத்திட்டம் மற்றும் விதிமுறையை பின்பற்ற தயார்' என, என்.சி.டி.இ.,க்கு கடிதம் கொடுத்த பிறகும், அவற்றில் கூட மாணவர் சேர்க்கை நடத்தாதது ஏன் என, கேள்வி எழுந்துள்ளது.
இந்த பிரச்னைகளால், இந்த ஆண்டு பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கை ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி.எட்., படிக்க விரும்பிய மாணவர்கள், முதுகலை படிப்பை மேற்கொள்ள தயாராகியுள்ளனர்.