அரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்!

தேர்ச்சி விகிதம் குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, 'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


இலவச திட்டம்:

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் மெட்ரிக் பள்ளிகளை விட குறைவாக உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளை நோக்கி, பெற்றோர் கவனம் திரும்பிஉள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, அரசின் இலவச திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மானியம் போன்றவற்றால், தேர்ச்சி விகிதம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்ச்சி விகித இலக்கை ஆசிரியர்கள் தவறாக புரிந்து கொண்டு, 'ஆவரேஜ்' மாணவர்களை, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில்,'பெயில்' ஆக்குகின்றனர். இதனால், மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.

வழக்கு:

மதுரை, ஆலம்பட்டியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், இரண்டு மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில்,'பெயில்' செய்யப்பட்டதால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக, மாணவனின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை, பள்ளி கல்வித்துறைக்கு,'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில்,'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் குறித்து விசாரித்த போது, கட்டாயமாக, 'பெயில்' ஆக்குவது, மாணவர்களை பாதியிலேயே பள்ளியில் இருந்து விரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
கட்டாயமாக, 'பெயில்' ஆக்குவது, பள்ளியில் இடைநிற்றல் போன்றவற்றை, நாங்கள் அனுமதிப்பதில்லை. தேர்ச்சி இலக்கு வேண்டும் என்பதை, ஆசிரியர்கள் புரிந்து கொண்டு கற்பித்தலில் மாணவர்களை அறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாறாக அவர்களை கட்டாய,'பெயில்' ஆக்குவது கூடாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, 'பள்ளிக்கு பாதி நாட்கள் வராத கிராமப்புற மாணவர்களும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களிடம் தேர்ச்சி இலக்கை எதிர்பார்க்க முடியாது. எனவே, மாணவர்களின் குடும்ப, சமூக சூழல்களுக்கு ஏற்ற நிலையில் தான், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கிடைக்கும்' என்றனர்.

தவறில்லை:

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறும்போது,''தேர்ச்சி இலக்கை எட்டாவிட்டால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என்ற மிரட்டலை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கைவிட வேண்டும். ''பணிக்கு வந்து சரியாக கற்பிக்காத ஆசிரியர்கள், உண்மையில் தவறு செய்தால் அவர்களை தண்டிப்பதில் தவறில்லை. மாறாக, அனைத்து இடங்களிலும் தேர்ச்சி இலக்கு வைப்பதால், கட்டாய,'பெயில்' ஆக்கும் சம்பவங்கள்நடக்கின்றன,'' என்றார்.