690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690
கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லுாரிகளில் பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மாதமே நடக்க வேண்டிய நிலையில், புதிய விதிமுறை பிரச்னைகளால் தள்ளிப் போனது.
இந்நிலையில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை, தமிழகத்தின், 13 கல்வியியல் கல்லுாரிகளில், விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை பெறலாம். விண்ணப்பக் கட்டணமாக, 300 ரூபாய் பெறப்படும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், அதற்கான ஜாதி சான்றிதழில்,
அரசிதழ் பதிவு பெற்ற
அதிகாரியின் கையொப்பம் பெற்று வர வேண்டும்; அவர்களுக்கு சலுகைக் கட்டணமாக, 175 ரூபாய் பெறப்படும்; தபால் மூலம் விண்ணப்பங்கள் விற்பனை இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 11ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கிடைக்கும்படி, 'செயலர், தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை 2015 - 16, விலிங்க்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விவரங்களை, www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இன்ஜினியர்களுக்கும் தகுதி: பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விதி
முறைகளையும், கல்லுாரி கல்வி இயக்ககம்
அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு முதல் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்வி பட்டப் படிப்பு முடித்தவர்களும், பி.எட்., படிக்கத் தகுதி பெறுவர் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.