கலை, அறிவியல் கல்லூரிகளில் 30 சதவீதம் கூடுதல் 'அட்மிஷன்'

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 30 சதவீத அளவுக்கு, கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க, பல்கலை கழகங்கள் அனுமதி வழங்கி உள்ளன. தமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆங்காங்கே காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் மட்டுமே, தற்போது மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்று, பின், உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி ஆன, மாணவர்களைச் சேர்ப்பதும், சில கல்லுாரிகளில் நடந்து வருகிறது. இருப்பினும், கல்லுாரி கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைகள் அனுமதித்த இடங்களுக்கான சேர்க்கை, பல கல்லுாரிகளில் முடிந்து விட்டதால், கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முடியாத நிலை உள்ளது.
அதனால், கலை, அறிவியல் கல்லுாரிகளில், கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என, அனைத்து பல்கலை கழகங்களுக்கும், கல்லுாரி கல்வி இயக்ககம் கடிதம் அனுப்பியது. இந்தக் கடிதத்தை பரிசீலித்த பல்கலை கழகங்கள், ஒவ்வொரு கல்லுாரியின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு ஏற்ற, 30 சதவீத அளவுக்கு கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளன. ஆனாலும், 'வரும், 31ம் தேதிக்குள், மாணவர் சேர்க்கையை முடித்து, 200 வேலை நாட்களை உறுதி செய்ய வேண்டும்' என, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது