செப்., 2ல் பஸ்கள் ஓடுமா?

பெங்களூரு:செப்., 2ம் தேதி, தேசிய அளவில் மாநில போக்குவரத்து கழகங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருப்பதால், கர்நாடகாவிலும் பஸ் சேவை பாதிக்கப்படும் சூழல்

ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவை எதிர்த்து, செப்., 2ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய, மத்திய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மாநில போக்குவரத்து கழகங்கள் தீர்மானித்துள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும், இந்த வேலை நிறுத்தத்தை கைவிடும்படி, போக்குவரத்து துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதை, பல தொழிலாளர் சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இந்த பொது வேலை நிறுத்தத்தில், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் - கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் பெங்களூரு மெட்ரோ பாலிடன் போக்குவரத்து கழகம் - பி.எம்.டி.சி., ஆகியவைகளும் பங்கேற்க உள்ளன. இதனால், அன்று பஸ் சேவை பெரிதும் பாதிக்கப்படும் என தெரிகிறது.
கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர் மற்றும் தொழிலாளர் சங்க பொது செயலர் ஆனந்த சுப்பாராவ் கூறியதாவது:செப்., 2ம் தேதி டவுன்ஹால் எதிரில், காலை, 11:00 மணியளவில், பெருமளவில் போக்குவரத்து தொழிலாளர்கள் கூடி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர். இது தவிர, குறைந்தபட்ச ஊதியமாக மாதம், 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்.தொழிலாளர் சட்டத்தை மீறி நடவடிக்கை எடுப்பதை தடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர், பென்ஷன் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்ப பெறுதல் போன்ற கோரிக்கைகளும், அக்கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.