செப்., 2ல் பஸ், ஆட்டோ ஓடுமா?

சென்னை:மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவை கைவிட வலியுறுத்தி, செப்., 2ம் தேதி பஸ், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை இயக்கப் போவதில்லை என, தமிழ்நாடு மோட்டார் வாகன சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

புதிய மோட்டார் வாகன மசோதாவுக்கு எதிராக, தமிழகத்தில், பஸ், லாரி, வேன் மற்றும் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் உரிமையாளர் உள்ளிட்ட சங்கத்தினர் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்குப் பின், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன நிர்வாகி ஆறுமுக நயினார் கூறியதாவது:மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதா தொழிலாளர்களுக்கு எதிரானது. ஓட்டுனர் உரிமம், வாகன தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்குவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும், தனியாரிடம் வழங்க இந்த மசோதாவில் சட்ட திருத்தம் உள்ளது.
இதற்கு எதிராக, ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள அனைத்து சங்க உறுப்பினர்களும், செப்., 2ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகிறோம். இந்தப் போராட்டத்தில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கின்றனர்; இதனால், பஸ்கள் ஓடுவதில் கடும் பாதிப்பு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி சுகுமார் கூறியதாவது:செப்., 2ம் தேதி, தமிழகத்தில், ஒரு லட்சம் லாரிகள் ஓடாது; மணல் லாரிகளும் இயக்கப்படாது; வேன், ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்களும் இயங்காது.இவ்வாறு அவர் கூறினார்.