176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல்!

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளில் பணி புரிந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் வாயிலாக கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது. மாநிலம் முழுவதும், பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்த விருப்ப பட்டியல் படிவங்கள் பெறும் முகாம்
நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், ராஜவீதி அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடந்தது.
முதல்கட்ட பணிநிரவலில், 136 பேர் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா ஆகியோரிடம் சமர்ப்பித்தனர்.மாநில இயக்குனரின் உத்தரவின் படி, நடுநிலைப்பள்ளிகளாக இருப்பின் மாணவர்கள் எண்ணிக்கை, 70க்கும் குறைவாகவும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளாக இருப்பின் மாணவர்கள் எண்ணிக்கை, 100க்கும் குறைவாக இருப்பின் அப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் கட்டாய மாற்றம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாற்றுபணி ஆணைகள்கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு மற்றும் உபரி என்ற அடிப்படையில் இம்முகாமில் பங்கேற்க, 176 பகுதி நேர ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்கள், தங்கள் விருப்பம், குடியிருப்பு பகுதியின் தொலைவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரிகளின் பட்டியலில் இடம்பெற்ற பள்ளிகளில் மூன்றினை தேர்வு செய்து படிவங்களை சமர்ப்பித்தனர்.
இப்படிவங்கள், தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய, புதிய பள்ளிகள் பட்டியல் வெளியிடப்படும். கட்டாய பணிநிரவல் என்ற சூழலில், சில ஆசிரியர்கள் விருப்பமின்றியும், பலர் இடமாறுதல் தேவை என்று ஆர்வத்துடனும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பகுதி நேர ஆசிரியர்கள் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் பணி புரிவதால் மத்திய அரசு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்ற சூழலில் இக்கட்டாய பணிநிரவல் செய்யப்படவுள்ளது' என்றார்.