15 எஸ்.சி/எஸ்.டி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று
முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், " ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு தயாரித்து வழங்குவதில் உள்ள சிரமத்தினை குறைக்கும்

வகையில், நடப்பாண்டில் 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கும் என மொத்தம் 12 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 260 நீராவி கொதிகலன்கள் வாங்கி வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப தட்டு மற்றும் டம்ளர்களை பயன்படுத்தி வருகின்றனர். மாணவ / மாணவியரிடம் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் நோக்கத்தில், 1,314 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 98,039 மாணவ / மாணவியருக்கு, 1 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் எவர்சில்வர் தட்டு மற்றும் டம்ளர் வாங்கி வழங்கப்படும். பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர், தங்கள் பணி காரணமாக இருப்பிட மாவட்டங்களையும், குடும்பங்களையும் விட்டு பிற மாவட்டங்களுக்குச் சென்று தங்கி பணி புரியும் போது பாதுகாப்புடனும், கவலையின்றியும், தங்கிப் பணிபுரிவதற்கு ஏதுவாக மகளிர் விடுதிகள் துவங்குவது அவசியமாகும். எனவே, முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகள் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்படும். ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே மேல்நிலைக் கல்வி பயில்வதற்கும், விரும்பும் பாடப் பிரிவில் சேர்வதற்கும் ஏதுவாக வரும் கல்வியாண்டில் 5 ஆதிதிராவிடர்/பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக 2 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும். இதே போன்று, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே பள்ளிக் கல்வியை தொடர ஏதுவாகவும், இடை நிற்றலை தவிர்க்கும் நோக்குடனும், வரும் கல்வியாண்டில் 15 ஆதிதிராவிடர் /பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும். சேலம் மாவட்டம் அபினவம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வெள்ளி மலையில் 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதே போன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 32,813 பழங்குடியினர்கள் பயன்பெறும் வகையில் உதகமண்டலத்தில் உள்ள முத்தோரை பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில், 2 கோடி ரூபாய் செலவில் மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி ஒன்று தோற்றுவிக்கப்படும். பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில், அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டதை போன்று பழங்குடியினர் உண்டி உறைவிட, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில், 1 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் 26 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, Smart Class Room ஏற்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது