'14ம் தேதிக்குள் அட்மிஷனை முடிங்க'

'அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 536 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, வரும், 14ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 536 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கு, ஜூன், 28 முதல் ஆக., 2ம் தேதி வரை, பல கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடந்தது. இந்த ஆண்டுக்கான மொத்தமுள்ள, 2.02 லட்சம் இடங்களில், 1.07 லட்சம் இடங்கள் நிரம்பின. 94 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், பி.இ., - பி.டெக்., படிப்பில், சிறுபான்மை கல்லுாரிகள், கவுன்சிலிங்குக்கு ஒதுக்காத, 50 சதவீத இடங்கள், மற்ற கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 35 சதவீத இடங்களுக்கு, வரும், 14ம் தேதிக்குள், மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை ஏஜன்சியான, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.

ஆக., 14க்கு பின், மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்தாமல், மாணவர்களின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; சேர்க்கை மற்றும் காலியிட பட்டியலை, அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்றும், கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.