10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு

கல்வித்துறையில், 3,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், இன்று பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்கள் கடுமையாக பாதிப்பட வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில், தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இன்று முதல், 28ம் தேதி வரை, 6 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், 3,000 பேருக்கு பணி நிரவல் என்ற பெயரில், பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.

இதில் வெளிப்படைத் தன்மை இல்லை; பணி நிரவலுக்காக, மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, ஆசிரியர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதில் பெரும் குளறுபடி நடப்பதாக, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:பத்தாம் வகுப்பு அறிவியலில், செய்முறை பயிற்சியை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஆனால், பல இடங்களில் அறிவியல் ஆசிரியர்களை உரிய விதிகளின்படி நியமனம் செய்யவில்லை. மேலும், தற்போதைய மாணவர் சேர்க்கைப்படி, எண்ணிக்கையை சரியாக கணக்கிடுவதில்லை. பல ஆண்டு களுக்கு முந்தைய கணக்கின்படி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயித்து, தங்கள் விருப்பத்துக்கு பணி நிரவல் என, 'டிரான்ஸ்பர்' நடக்கிறது.

இதனால், அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு, கூடுதல் ஆசிரியர்கள்; சில இடங்களில் குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாத சூழல் ஏற்படும். எனவே, பல பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கே ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். காலாண்டு தேர்வு நடக்கும் நிலையில், ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்வது, கற்பித்தல் பணியில் ஆர்வக்குறைவை ஏற்படுத்தும்.