ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் CPS தொகையை செலுத்தாத தமிழக அரசு: தகவல் உரிமை சட்டத்தில் அம்பலம்

   ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயை தமிழகஅரசு மத்திய அரசிடம் செலுத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.


        1.1.2004 முதல் மத்திய அரசு வேலையில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கட்டாயமானது. கடந்த 1.4.2003 க்கு பிறகு முதல் மாநிலமாக தமிழக அரசும் அறிமுகப்படுத்தியது. 2006 ஜூன் 1 முதல் அரசு ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டது.இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும்,ரூ.33 ஆயிரத்து 121 கோடி மாநில அரசு ஊழியர்களுக்கான நிதியாக ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மற்ற மாநிலங்களில் ஓய்வூதிய நிதி மற்றும் பணபலனும் கொடுத்துள்ளனர்.
பிற மாநிலங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆயிரம் பேருக்கு ஓய்வு ஊதிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 533 பேர் இறந்தவர்கள். ( ஜூன் 29, 2015 நிலவரப்படி).ஆனால் தமிழகத்தில் ரூ.5,000 கோடி பிடித்தம் செய்தும், இதுவரை ஆணையத்திடம் செலுத்தாமல் உள்ளது. பிடித்தம் செய்ப்பட்ட பணம் என்ன ஆனது என்ற தகவலும் தெரியவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்இதுபற்றியவிபரங்களை திரட்டிய, 
திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது; பிறமாநிலங்களெல்லாம் புதிய திட்டத்தில் பிடித்த பணத்தை ஆணையத்திடம் செலுத்திவிட்டன. ஆனால் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. இதுவரை பணியில் இறந்துபோன யாருக்கும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் எதுவும் கொடுக்கவில்லை. திட்டம் துவங்கி 12 ஆண்டுகாகியும் பணம் செலுத்தாதது தற்போது வெளிப்பட்டுள்ளது. இதன்பிறகாவது இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், என்றார்.