பொதுமாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை: ஆசிரியர்கள் எதிர்ப்பு

மதுரை :ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை கல்வித்துறை நடத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் தாமதமாக நடந்தது. இந்த ஆண்டும் ஜூலை இரண்டாவது வாரம் கடந்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாததால் ஆசிரியர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கலந்தாய்வுக்கான அரசு உத்தரவை (எண்: 232) கல்வித்துறை வெளியிட்டது. அதில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய ஆசிரியர்களுக்கு விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 'தற்போது பணியாற்றும் பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் ஆசிரியர் பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற புதிய நிபந்தனைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் வள்ளிவேலு கூறுகையில், "இப்புதிய நிபந்தனை ஆசிரியர்களை கடுமையாக பாதிக்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு மூலமாகவும், பணி ஓய்வு மூலமாகவும் நுாற்றுக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நகர்ப் பகுதியில் ஏற்படுகின்றன. இந்நிபந்தனையால் நகர்ப் பகுதி காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல பெரும்பாலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' என்ற வழக்கமான நடைமுறையையும் இக்கலந்தாய்வில் ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.