உதவி பேராசிரியர் நியமிக்க உயர் நீதிமன்றம் தடை

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சங்கீதா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:-
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில்,
உதவிப் பேராசிரியராக, ஒன்பது ஆண்டுகளாக இருக்கிறேன். கடந்த ஆண்டு, புதுச்சேரி மத்தியப் பல்கலை பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கு புதிய நியமனம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. ஜூலை 17ம் தேதி, பல்கலையில் நேர்முகத் தேர்வு நடந்துள்ளது. என்னை விட தகுதி குறைவான நபர்கள், இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தகுதி இருந்தும் எனக்கு அழைப்புக் கடிதம் அனுப்பவில்லை. பல்கலையின் செயல், அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, 17ம் தேதி நடந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில், உதவிப் பேராசிரியராக யாரையும் நியமிக்கக் கூடாது என, இடைக்கால தடை விதிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் பதவிக்கு, நான் அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்க, பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவித்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூலை 17ம் தேதி நடந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, புதுச்சேரி மத்திய பல்கலை பதிவாளருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.