பள்ளி மாணவர்களுக்கு 'இன்ஸ்பயர்' விருது

பள்ளி மாணவர்களுக்கு 2015-16 க்கான மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு (இன்ஸ்பையர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டும்
வகையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது. இந்த விருதுக்கு 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா 5 மாணவர்களும், நடுநிலைப்பள்ளிகள் தலா 3 மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அறிவியல் படைப்புகளை உருவாக்க தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பின் மாவட்ட, மாநில, தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு விருது வழங்கப்படும்.
2015-16 க்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பள்ளிகள் மாணவர்களின் விபரங்களை www.inspireawards.dst.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த ஆண்டு முதல் அறிவியல் படைப்புக்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரில் செலுத்தப்பட உள்ளது. இதனால் மாணவர் ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவற்றை ஆக., 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.