இலவச கல்வி ஒதுக்கீடு சேர்க்கையில் போலி சான்று: பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

இலவச கல்வி ஒதுக்கீடு சேர்க்கையில் போலி சான்று: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு
தமிழகப்பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் உள்ளதா என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு
ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது.இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பள்ளிகளில் நலிவுற்ற மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில் டில்லியில் பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் போலி வருமான சான்று, இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு கோடி கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனை நடந்திருப்பது டில்லி போலீசாரால் கண்டு பிடிக்கப் பட்டது.
இது போன்ற முறைகேடுகள் நாடுமுழுதும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 2013--14, 2014--15, 2015--16 நடந்த பள்ளி சேர்க்கை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதற்கான ஆவணங்களை தமிழகத்தில் இருந்து ஜூலை 31க்குள் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.இதற்காக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் சுந்தரபரிபூரணன் சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், தேனி மாவட்டங்களிலும், மவுலீஸ்வரன் காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்மாவட்டங்களிலும், செல்வகுமார் ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும்,ராமச்சந்திரன் திருவள்ளுவர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், 
சிவகங்கை, புதுக்கோட்டைமாவட்டங்களிலும், ஜெயந்திராணி திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், ரேவதி- திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.