அரசு உரிமம் பெற்றவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க கோரிக்கை

அரசு உரிமம் பெற்ற புத்தக விற்பனையாளர்களுக்கு, உடனடியாகப் பாடப் புத்தகங்கள் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

 
            மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு பாட நுால் கழகத்தில், காப்பீட்டுத் தொகை செலுத்தி உரிமம் பெற்ற, புத்தக வியாபாரிகள் மூலம், மாணவர்களுக்குப் புத்தகங்கள் வினியோகிக்கப் பட்டன.சில ஆண்டுகளுக்கு முன், ஏழை மாணவர்களுக்கு, பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த, அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவர்களுக்குப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

           இதனால், புத்தக வியாபாரிகளுக்கு, 75 சதவீதம், விற்பனை குறைந்தது. தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவர்களுக்கு மட்டும், பாடப் புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர்.
தற்போது, பாட நுால் கழகம், தனியார் பள்ளிகளுக்கு, முன்னுரிமை அளித்து, நேரடியாக விற்பனை செய்து வருகிறது. பள்ளிகள் திறந்து, ஒரு மாதமாகியும், இதுவரை, உரிமம் பெற்ற புத்தக விற்பனையாளர்களுக்குப் புத்தகங்கள் வினியோகிக்கப்படவில்லை.

இதுகுறித்து, அனைத்து தமிழ்நாடு பாட நுால் விற்பனையாளர் சங்கம் சார்பில், கல்வித் துறைச் செயலர் மற்றும் தமிழ்நாடு பாடநுால் மேலாண் இயக்குனரிடம், மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை நடவடிக்கை இல்லை.தமிழகம் முழுவதும், மாணவ, மாணவியர், புத்தகக் கடையில், புத்தகம் கேட்கும்போது, இல்லை எனச் சொல்வதால், தமிழக அரசுக்கு, அவப்பெயர் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, உரிமம் பெற்ற புத்தக விற்பனையாளர்களுக்குப் புத்தகங்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.