பள்ளி செல்லும் வயதில் பொது இடங்களில் பிச்சை பணம் வசூலில் சிறுவர்களை களம் இறக்கும் கும்பல்

பொது இடங்களில் சிறுவர், சிறுமியர்களை கொண்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துபவர்களை கண்காணித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பள்ளி செல்லும் வயதில், பஸ்ஸ்டாண்ட் மற்றும் கோயில் பகுதிகளில் சுற்றி திரியும் சிறார்களை காணும்போது, பார்ப்போரின் மனம் நெகிழ்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், போக்குவரத்து சிக்னல்கள் போன்ற இடங்களில், குழந்தைகளை காட்டி பிச்சை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்து ஒரு கும்பல் சிறுவர்களையும் களம் இறக்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தில்மூன்று பங்கை அக்கும்பல் எடுத்துகொண்டும், ஒரு பங்கை சிறுவர்களுக்கு கொடுக்கிறது. பின்னணியில் செயல்படும் கும்பலை பிடிக்க அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை.தட்டி கேட்க அமைப்பு இல்லாததால் தமிழ் தெரியாத ஆந்திரா மற்றும் வடநாட்டு சிறுவர்களை இறக்குமதி செய்து இக்கும்பல் தொழிலை கச்சிதமாக செய்கிறது. கோயில் விழாக்கள் நடக்கும் இடங்களையும், நாட்களையும் சரியாக கவனித்து அங்கு தற்காலிக கடைகளுடன் பிச்சை கும்பலும் துண்டு விரிக்கின்றன. புரட்டாசி முதல் தை வரை பெருமாள்கோயில், முருகன் கோயில், ஐயப்பன் கோயில் ஆகியவற்றில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது வழக்கமாக உள்ளது. ரயில்களில் பிச்சை எடுப்பவர்களின் கைடுகளாக மாறுகின்றனர்.
முதியவர்களுக்கு அறிவொளி இயக்கம், குழந்தைகளுக்கு கட்டாய கல்வி, சிறுவர்கள் வேலைக்கு செல்வதை தடுக்க குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் போன்றவை பின்பற்ற படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் கல்வி கற்க உண்டு உறைவிட பள்ளிகளை அரசு திறந்துள்ளது. இங்கு கல்வியுடன் வேலை வாய்ப்பு பயிற்சியும் அளிக்கபடுகிறது.குழந்தைகள் நலனுக்கு அருசின் சலுகைகள் பல இருந்தும் அதை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க போலீசில் தனிப்பிரிவு துவக்கவேண்டும். சமூக விரோத கும்பலை பிடித்தால்தான் குற்றங்கள் குறையும். இல்லையெனில் நாட்டின் எதிர்காலம் சோம்பேறிகளின் கைக்கு சென்று விடும்.சத்திரபட்டி சமுத்திரகனி,"" வெளிநாடுகளில் பிச்சை எடுப்பவர்களை பார்க்க முடியாது.இங்கு கோயில் , பஸ் ஸ்டாண்ட், தெருக்களில் பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.பல இடங்களில், கைக்குழந்தை மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கின்றனர். இவர்கள் ஓடும் பஸ்சில் குறுக்கும், நெடுக்குமாக செல்வது விபத்தில் சிக்குவார்களோ என நாம் அச்சப்படும் நிலை உள்ளது.
இதில் சிலர் குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் வீடுகளில் தங்கள் கைவரிசியைகாட்டுகின்றனர்.தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். சத்திரபட்டி பஸ்ஸ்டாண்ட், சமுசிகாபுரம் முக்குரோடு பகுதியில் விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வேஷத்தை போட்டு பிச்சை எடுக்க வைக்கின்றனர். ஒரு பிள்ளைக்கு காசு கொடுத்தால் போதும் மற்ற பிள்ளைகளும், பிச்சை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இதனால் மனசஞ்சலம் ஏற்படுகிறது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து குடும்பத்தை நடத்திவரும் இவர்களை கண்டறிந்துகடுமையான தண்டனை வழங்கினால் இதை தடுக்கலாம்,''என்றார்.