'ஹெல்மெட்' வதந்தி: போலீசார் எச்சரிக்கை

சென்னை:'ஹெல்மெட்' அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, முதல்வர் அறிவித்து இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.'இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என்பது, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


இதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், விஷமிகள் சிலர், 'ஹெல்மெட் அணிவது, அவரவரின் தனிப்பட்ட விருப்பம். உயிரின் மேல், விருப்பம் உள்ளவர்கள் அணிந்து கொள்ளட்டும்.
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, காவல் துறைக்கு, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். ஹெல்மெட்டுக்காக போலீசார் அபராதம் கேட்டால், 98940 17599 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்' என, வதந்தி பரப்பி வருகின்றனர்.
அதை, 'வாட்ஸ் ஆப்'பிலும் உலவ விட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷமிகள் வெளியிட்டுள்ள மொபைல் போன் எண் யாருடையது; இதன் பின்னணியில் இருப்போர் யார் என்பது பற்றியும், துப்பு துலக்கி வருகின்றனர். ஆனால், விஷமிகள் வெளியிட்டுள்ள மொபைல் போன் எண், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஹெல்மெட் குறித்து மட்டுமல்ல, முதல்வர் அறிவித்து இருப்பதாக, வேறு எதை பற்றியும் வதந்தி பரப்பினால், கடும் நடவடிக்கை பாயும்' என்றார்.