"ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை வலியுறுத்தி ஹாசாரே போராட்டம்

மக்களவைத் தேர்தலின்போது உறுதியளித்தபடி, "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்று வரும் பேராட்டத்தில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கலந்துகொண்டு பேசியதாவது:
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டம் தொடர்பான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஹாசாரே இந்த போராட்டத்தை நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலின்போது பாஜக தேர்தல் அறிக்கையில் , "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டிருந்தார்கள்.
 ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை கடந்தும், அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு உறுதிமொழி தேவையில்லை. செயல்படுத்துங்கள்.
நமது வீரர்கள் பாதுகாப்பில் இருப்பதால் தான் நாம் நிம்மதியாக தூங்க முடிகிறது. ஆனால் இந்த வீரர்கள் கவுரவமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டாமா? வீரர்கள் இறந்து விட்டால் அவர்களது குடும்பம் எப்படி வாழ முடியும் ? அவர்களின் குழந்தைகள் படிப்பு, எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டாமா?
கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் பணத்தை வீணடித்து வருகின்றனர் உறுப்பினர்கள். இப்படி மக்களின் பணத்தை வீணடிக்கும் போது, நமது வீரர்களுக்கான "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டம் குறித்து அரசால் முடிவெடுக்க முடியவில்லை என்பதில் என்ன நியாயம் இருக்கிறது.
எனவே, விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையக மசோதாவை எதிர்த்தும், "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தியும், தில்லி ராம்லீலா மைதானத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற பெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று ஹசாரே கூறினார்.