தண்ணீர் தேசம் கண்ணீர் தேசமானது

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாடு முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்து வருகின்றனர். தெரு எங்கும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்கள், பிளக்ஸ், கருப்பு பேட்ஜ் என தண்ணீர் தேசமான ராமேஸ்வரம் கண்ணீரில் மூழ்கியுள்ளது.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரோட்டிலுள்ள டாக்டர் அப்துல் கலாம் வீட்டில் கடந்த ஜூன் 27 முதல் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் வீடுகளுக்கு முன் சோகத்துடன் கருப்பு பேட்ஜ் அணிந்து அமர்ந்துள்ளனர். அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். ராமேஸ்வரத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் ஆங்காங்கு தனிநபர் முதல் பல்வேறு அமைப்புகள் வரை பிளக்ஸ், பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ளன.
மாலைகளுக்கு பதிலாக மலர் வளையங்கள்பூக்கடைகளில் மலர் வளையங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏராளாமானோர் அவற்றை வாங்கி செல்கின்றனர். புனித நீராட வந்த வெளி மாநில பக்தர்களும் கலாம் வீட்டை பார்த்துவிட்டு செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் அவரது வீடு அருகேவுள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் அதை பார்த்து செல்கின்றனர்.
குவிந்த செய்தியாளர்கள்கலாமுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் வருவதால் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் குவிந்துள்ளனர். ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் லாட்ஜ்களில் அறை கிடைக்காமல் பலர்
வாகனங்களில் தங்கும் நிலை உள்ளது. கலாமுக்கு இரங்கல் தெரிவித்து பெரும்பாலான ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று 3 வது நாளாக மூடப்பட்டன. திறந்திருந்த ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கலாம் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள கிழக்காடு மைதானம், அவரது உடல் அடக்கம் அங்கிருந்து மூன்றரை கி.மீ., துாரமுள்ள பேக்கரும்பு ஆகிய இடங்களை பொதுப்
பணித்துறையினர் சீர் செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் ரோந்துராமேஸ்வரத்திற்கு வரும் அனைவரும் அந்த இடங்களை பார்வையிட்டு அலைபேசியில் படம் எடுத்து செல்கின்றனர். கலாமுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி வருவதாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக கடலோர பகுதிகளில் மத்திய அரசின் என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படையினர் நவீன ஹெலிகாப்டரில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தயாரான ஹெலிபேடுகலாம் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து மண்டபம் கேம்ப் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலுள்ள ஹெலிபேடிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் கிழக்காடு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மண்டபம் கேம்ப் ஹெலிபேடு சீரமைக்கப்பட்டது.
இதை ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார், எஸ்.பி., மயில் வாகனன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். கலாம் ஜனாதிபதியாக இருந்த போது இதே ஹெலிபேடில் தான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியுள்ளார். தற்போது அவரது உடல் வருவது வேதனையளிப்பதாக பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர் ஒருவர் கண்ணீர் விட்டார்.-----------


கிச்சடிக்கும் கிராக்கி

நேற்று ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் உணவு பொருட்களை உடனடியாக தயார் செய்து சப்ளை செய்வதில் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாயினர். அவசரத்தேவையை
சமாளிக்க ரவையை கொண்டு ஓட்டல்களில் கிச்சடி உடனடியாக தயாரித்து வழங்கப்பட்டது. அதற்கும் கிராக்கி ஏற்பட்டது.

தீர்த்தம் ஊற்றும் பணி நிறுத்தம்

டாக்டர் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு தீர்த்தம் ஊற்றும் பணியை நிறுத்தியுள்ளதாக யாத்திரை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். பக்தர்களே வாளி எடுத்து
தீர்த்தத்தை இறைத்து ஊற்றிக்கொள்கிறார்கள்.



சந்திராயன், மங்கள்யான் வெற்றியில் கலாம்

சில ஆண்டுகளுக்கு முன் இஸ்ரோ வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பிய
"சந்திராயன் - 1' மற்றும் செவ்வாய்க்கு அனுப்பிய "மங்கள்யான்' ஆகிய விண்கலன்களின் வெற்றிக்கு அப்துல்கலாமின் ஐடியாக்களே முக்கிய பங்கு வகித்தது என இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: அப்துல் கலாம் உடனான எனது முதல் சந்திப்பு ஒரு சர்வதேச மாநாட்டில் கிடைத்தது. அப்போது என்னிடம் "சந்திராயன்' விண்கலம் தொடர்பாக பேசினார். "நிலவுக்கு எப்படி செல்ல முடியும் என்ற வழியை முதலில் கண்டுபிடி' என கூறினார்.
இதுதொடர்பான பல்வேறு தகவல்களை எனக்கு வழங்கினார். சந்திராயன் விண்கலத்தை, நிலவுக்கு அனுப்பிய நாளில் அவர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வரவில்லை. மீண்டும் நான் அவருக்கு அழைப்பு விடுத்தேன். நவ., 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருகை தந்தார். அன்றைய தினம் சந்திராயன் விண்கலம், நிலவை வெற்றிகரமாக அடைந்திருந்த நேரம். வெற்றிக் கொண்டாட்ட வேளையில் கூட "அடுத்தது என்ன?' என்று தான் கேட்டார். அந்த நேரத்தில் தான் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பிய 2வது நாள். எப்போதும் அவரது மனதில் " அடுத்த வேலை' என்ன என்ற சிந்தனையே இருந்தது. தனிப்பட்ட முறையில் என்னிடம் "நீ இஸ்ரோவில் பொறுப்பேற்ற பின், பெங்களூருவுக்கு வந்து உன்னை சந்திப்பேன்' என உறுதி கூறினார். ஆனால் தற்போது வராமல் சென்றுவிட்டார்' என்றார்.