பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வை எழுதிய மாணவர்கள் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in
என்ற இணையதளத்திலிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 21-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சுமார் 75 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 26 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்த சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சிறப்பு துணைத் தேர்வை எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.மறுகூட்டல்: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 27 முதல் 29 தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரடியாகச் சென்று ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50-ஐ ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் மறுகூட்டல் கட்டணம் ரூ.305, ஒருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் கட்டணம் ரூ.205 ஆகும்.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மறுகூட்டல் முடிவுகளை அறிய இயலும். எனவே, அந்தச் சீட்டை மாணவர்கள் கவனமாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.