முரண்பாடான விதிகளால் தவிக்கும் தனியார் பள்ளிகள்


நாள்

16 ஜூலை
2015
00:57

தனியார் பள்ளிகளுக்கான, முரண்பாடான நிலப்பரப்பு விதிமுறைகளை, காலத்திற்கு ஏற்ற வகையில் தளர்த்தவும், 10 ஆண்டுகள் பழமையான பள்ளிகளுக்கு விதிவிலக்கு வழங்கவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தனியார் பள்ளிகளை துவங்க, பல நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. சிட்டி பாபு குழு மற்றும் நீதிபதி சம்பத் கமிட்டி ஆகியவற்றின் அறிக்கைப்படி,
* குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பு இருக்க வேண்டும்.
* இரு இடங்களில் (வளாகத்தில்) ஒரே பள்ளி செயல்படக் கூடாது.
* பள்ளி கட்டடம் மற்றும் இடங்களுக்கு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்ட ஆணையம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
* பள்ளிக்கு உறுதிச் சான்றிதழ் இருக்க வேண்டும்.
* மைதானம் இருக்க வேண்டும்.இப்படி, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இதில், நிலப்பரப்பு பிரச்னையால், தமிழகம் முழுவதும், 1,200 தனியார் பள்ளிகள்; 520 அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கீகாரப் பிரச்னையில் சிக்கியுள்ளன. இந்த பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அங்கீகாரம் இல்லாததால், அரசின் உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலர், இந்த பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளன.


விதிமுறைகள்:

பள்ளி என்றால், மாநகரம், ஆறு கிரவுண்டு; மாவட்ட தலைநகரம், எட்டு கிரவுண்டு; நகராட்சி, 10 கிரவுண்டு; பேரூராட்சி, ஒரு ஏக்கர்; கிராமப்புறம், மூன்று ஏக்கர் என, நிலப்பரப்பு இருக்க வேண்டும் என, விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள், கடந்த, 2010ல் தான் வெளியானது. அதற்கு முன், குறைந்த இடங்களில் துவங்கிய, 2,000 பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில், தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது.குறிப்பாக, நிலப்பரப்பு விதிமுறைகளில், மாநகராட்சி, கிராமம் என்று பெரும் முரண்பாடு இருப்பதாகவும், வணிக நோக்கில் இல்லாமல், சேவை அடிப்படையில் துவங்கப்பட்ட, 10 ஆண்டுகள் முதல், 40 ஆண்டுகள் வரை,பழமையான பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவதில், மெட்ரிக் இயக்குனரகம் மெத்தனமாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் இவற்றில் படிக்கும், 5 லட்சம் மாணவர்களின் படிப்பு என்ன ஆகுமோ என்று, பெற்றோர் அச்சமடைந்து உள்ளனர்.எனவே, மாநகரம், கிராமம் என்று பாராமல், மாணவர்
எண்ணிக்கைக்கு ஏற்ப, நிலப்பரப்பு அளவை நிர்ணயிக்கலாம் என்றும், 2010க்கு முந்தைய பள்ளிகளை ஒழுங்குபடுத்தி, அவற்றுக்கு விலக்கு வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:
கே.ஆர்.நந்தகுமார், பொதுச் செயலர், தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம்:
முன்பு போல் இல்லாமல், நில மதிப்பீட்டு விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப, விதிமுறைகளை தளர்த்த வேண்டும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையை அரசு வெளியிட்டு, அதன்படி, நிலப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை, அரசு உடனே போக்க வேண்டும்.

எம்.ஜே.மார்ட்டின் கென்னடி, தலைவர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு (கிறிஸ்துதாஸ்), செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி, ராயபுரம், சென்னை:நிலப்பிரச்னையால், 40 ஆண்டுகள் பழமையான பள்ளிகள் கூட, கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த விதிகளால் சென்னையில், சவுகார்பேட்டை, தி.நகர், புரசைவாக்கம் என, நெருக்கடி மிகுந்த பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்குவதற்கு இடமே இல்லை.
மேலும், 520 அரசு உதவிபெறும் பள்ளிகளும், அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே, இந்த பள்ளிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்.

சந்திரசேகர், தனியார் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் மெட்ரிக் பள்ளி, தொட்டியம், திருச்சி:பெரும்பாலான, மாநகராட்சி பகுதிகளை ஒட்டிய கிராமப் பஞ்சாயத்து நிலங்களின் விலை, கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கிராமப்புறங்களில், மூன்று ஏக்கர் நிலம் வாங்கி, பள்ளிகள் அமைப்பது எளிதான காரியமல்ல. தொழிற்பூங்கா, துணை நகரம் என, பல பெயர்களில், கிராமப்புற புஞ்சை நிலங்கள் விலை உயர்ந்து விட்டதால், கிராமம், நகரம் என்ற நில விதிமுறை முரண்பாடுகளை, பள்ளிகளுக்கு நீக்க வேண்டும்.

என்.ராஜன், தாளாளர், சில்ரன் பாரடைஸ் மெட்ரிக் பள்ளி, செங்குன்றம்:நிலப்பரப்பு விதிமுறைகளால், சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடசென்னை பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சில பள்ளிகளுக்கு மாநகராட்சியாகவும், பின்புறம் கிராமப் பஞ்சாயத்தாகவும் உள்ளது. இதனால், கிராமப் பஞ்சாயத்து கணக்கில், மூன்று ஏக்கர் நிலம் வேண்டும் என்கின்றனர்.ஆனால், மாநகராட்சியை ஒட்டிய இடங்களில், மூன்று ஏக்கர் இடம் கிடைப்பது சாத்தியமே இல்லை. இந்த வகையில் மட்டும், 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.