மாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடுகற்பிக்கும் முறையே காரணம்

ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது.
மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள்
குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையை கடைபிடிக்கின்றனர்.
இதனால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது. இதற்கு ஒவ்வொருவரின் மூளையின் அடைவுத்திறன் வேறுபாடே காரணம்.இதை அறியாமல் பெற்றோர், ஆசிரியர்கள் 'படி, படி' என தொந்தரவு செய்வதால் மாணவர்களின் எண்ணங்கள் மாறுகின்றன. சிலர் தீய பழக்க வழக்கம், சினிமா போன்றவற்றுக்கு மாறிவிடுகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்தது.
பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது:ஒவ்வொரு மாணவரின் அடைவுத்திறனுக்கு ஏற்ப கற்பிக்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஆசிரியர்களால் முழுமையாக கற்பிக்க முடியாது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் விகிதம் 1:25 க்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில் கல்வித்திட்டத்தை மாற்ற வேண்டும். கற்பிக்கும் முறையை சிறந்த ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவம், ஆய்வின் அடிப்படையில் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும், என்றார்.