இயற்கை விவசாயத்தை பெருக்க வேண்டும்:அப்துல்கலாம் வலியுறுத்தல்

மதுரை:''இயற்கை விவசாயத்தை பெருக்கி கிராமங்கள், நகரங்களில் இயற்கை அங்காடிகளை அமைக்க வேண்டும்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தினார்.


மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ௯௦ வது ஆண்டு விழா நேற்று நடந்தது. முதுநிலை தலைவர் ரத்தினவேலு தலைமை வகித்தார். தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விழா மலரை வெளியிட்டு சங்கத்தின் 'டிஜிட் ஆல்' தொழில்நுட்ப பிரிவை துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது: தமிழக தொழில் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறீர்கள்.

'ஊரணிக்கு உயிர் கொடுப்போம்' திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் கண்மாய்கள், குளங்களை சுத்தப்படுத்த சங்கத்தினர் முன்வர வேண்டும். 'டிஜிட் ஆல்' தொழில்நுட்பம் மூலம் தொழில் முனைவோருக்கு கணினி, சமூக வலைத்தள அறிவை கற்பிக்க வேண்டும்.
தற்போது 'பிக்டேட்டா' முறை வளர்ச்சிகண்டுள்ளது. இதன்மூலம் தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற முடியும். மதுரை மல்லிகைக்கு உலகளவில் 'பிராண்ட்' செய்து சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பெருக்க வேண்டும். மக்கள் நோயின்றி வாழ கிராமங்கள், நகரங்களில் இயற்கை விவசாய அங்காடிகளை அமைக்க வேண்டும். வீடுகள் தோறும் சிறிய நுாலகங்கள் அமைத்து குழந்தைகளுடன் பெற்றோர் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.இந்தியா 20 க்கு 20 திட்டத்தின் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையும். கிராமங்களை ஒருங்கிணைந்த பன்முக பொருளாதார வளர்ச்சி பெற்றதாக மாற்ற முடியும் என்றார்.

செயலாளர் ராஜமோகன், பொருளாளர் ஜீயர்பாபு, முன்னாள் ஜனாதிபதியின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் நீதிமோகன் நன்றி கூறினார்.