அண்ணா பல்கலை அறையில் கலாம் பொருட்கள் பாதுகாப்பு

சென்னை, அண்ணா பல்கலையில், அப்துல் கலாம் தங்கும் அறையிலுள்ள, கலாமின் பொருட்கள் மற்றும் விருதுகளை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தப் பொருட்களின் உரிமை குறித்து, அரசு முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

அண்ணா பல்கலையின் முன்னாள் மாணவர் மற்றும் பேராசிரியரான அப்துல் கலாமுக்கு, அண்ணா பல்கலையில், செவ்வாய்கிழமை இரங்கல் கூட்டம் நடந்தது. அப்துல் கலாமின் படத்துக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.


பின், அண்ணா பல்கலை வளாகம், விருந்தினர் தங்கும் மாளிகையில் உள்ள, அப்துல் கலாமின் அறையை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கண்ணீர் ததும்ப பார்வைஇட்டனர்.
எளிமையான அந்த அறையில் ஒரு படுக்கை அறை, சிறிய பார்வையாளர் அறை மற்றும் சமையல் அறை உள்ளது. அப்துல் கலாம் தனக்கு வழங்கப்பட்ட விருதுகள், பரிசுகளை இங்குதான் வைத்துள்ளார்.

மேலும், அவரது கண்டுபிடிப்புகள் குறித்த பல கோப்புகளும் இங்கு இருக்கின்றன. இஸ்லாமியர்களின் புனித நுாலான குர்-ஆன், முகமது நபியின் வாழ்க்கை முறை மற்றும் உரைகள் அடங்கிய புத்தகம், வி.சி.டி.,யும் இயங்கக்கூடிய சோனி டேப் ரெக்கார்டர், இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா, மதினா புகைப்படம், பரிசாக வந்த புத்தர் சிலை, அசோக ஸ்துாபி தேசிய சின்னம், சந்தன மாலைகள், மயில் வடிவ கேடயம் உட்பட, பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிசுப் பொருட்களில், சென்னை மருத்துவ கல்லுாரியில், அவர் பங்கேற்றபோது வழங்கப்பட்ட புகைப்படமும் உள்ளது. மேலும் கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில் வழங்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து, ஆசிரியர்களும், மாணவர்களும் கண்ணீர் விட்டனர். அதில், '74 வயதுக் குழந்தை அப்துல் கலாம்' என, குறிப்பிடப்பட்டு, அவர் குழந்தை போல் படுத்திருப்பது போல் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் குறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அப்துல் கலாமின் அறையை அப்படியே வைத்திருந்து, அதை கண்காட்சி போல் வைப்பதா, அவரது பொருட்களை என்ன செய்வது போன்றவை குறித்து, தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்' என்றனர்.

கலாம் அறையை பார்க்க மாணவர்களுக்கு அனுமதி:அண்ணா பல்கலையில், 14 ஆண்டுகளாக அப்துல் கலாம் பயன்படுத்திய அலுவலக அறை மற்றும் 'வீடியோ கான்பரன்ஸ்' அறையை பார்க்க, மாணவர்களுக்கு அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.அண்ணா பல்கலையில், 2001ம் ஆண்டு அப்துல் கலாம் பேராசிரியராக பணிபுரிந்தார். அந்த வளாகத்திலுள்ள விடுதி யில், அவருக்கு தனி தங்கும் அறை ஒதுக்கப்பட்டது. மேலும், ராமானுஜர் கம்ப்யூட்டர் மைய கட்டடத்தில், அவருக்கு அலுவலகமும் ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில் அவர் பயன்படுத்திய, 'வீடியோ கான்பரன்ஸ்' அறை, 'கலாம் முன்மாதிரி கனவுத் தளம்' என்ற பெயரில், 'குழந்தை' என்று பொருள்படும்படி, 'கிட்ஸ்' (Kalam Innovation Dreams Space) பெயரில் அமைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை கடந்த, 2012 ஆகஸ்டில் கலாம் தான் திறந்து வைத்தார்.

இதுகுறித்து, கலாமுக்கு தேவையான கணினித் தொழில் நுட்ப வசதிகளை அளிக்கும் பணியிலும், கலாமின் அலுவலக பொறுப்பை இப்போது வரை கவனித்து வந்தவருமான, அண்ணா பல்கலை கணினி பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலருமான, 'ரைமண்ட்' உத்தரியராஜ் கூறியதாவது:'வை - பை' என்ற தொழில்நுட்பம் பெரிய அளவில் தெரியாமல் இருந்த காலத்தில், இந்த அலுவலகத்தில், 'வை - பை' வசதியை அப்துல் கலாம் பயன்படுத்தினார். அவர் சென்னைக்கு வரும்போது, அவரது அலுவலகத்துக்கு வந்து செல்வார்.
அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள், புகைப்படங்கள், அவர் குழந்தை முதல் பல பரிணாமங்களில் வளர்ந்த புகைப்படங்கள், இந்த அலுவலகத்தில் உள்ளன. அவற்றை மாணவர் பார்வைக்கு
வைத்துள்ளோம்.

அவருக்காக கட்டப்பட்ட, 'வீடியோ கான்பரன்ஸ்' அறை, இப்போது அவரது பெயரிலேயே இயங்குகிறது. அந்த அறையில் அவர் பாடம் நடத்திய வீடியோ திரையில், அவரைப் பற்றிய வரலாறு, மாணவர்களுக்கு பாடமாக நடத்தப்படுகிறது.தொழில் நுட்பத்தை கிராமங்களுக்கு கொண்டு சேர்ப்பது தான், கலாமின் மிகப்பெரிய குறிக்கோளாக இருந்தது. சென்னையில் ஒரு ஆசிரியர் ஆங்கிலப் பாடம் நடத்துகிறார் என்றால், அந்தப் பாடம், அனைத்து கிராமப் பள்ளிகளிலும், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேரலையாக வேண்டும் என்பார். கிராமத்திலிருந்து நகரம் வந்து படிக்க, தான் கஷ்டப்பட்டேன். கிராமப்புற மாணவர்களுக்கு இனி அந்தக் கஷ்டம் வரக்கூடாது என்று அடிக்கடி சொல்வார்.இவ்வாறு அவர் கூறினார்.


ராமேஸ்வரத்தில்...::


* ராமேஸ்வரத்திற்கு, புனித நீராட வந்த, வெளி மாநில பக்தர்களும், கலாம் வீட்டை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
* கலாம் இறுதி சடங்கில் பங்கேற்க, நாடு முழுவதிலும் இருந்து, அரசியல் தலைவர்கள் வருவதால், செய்தியாளர்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்துள்ளனர்.
*இதனால், விடுதிகளில் அறைகள் கிடைக்காமல், பலர் வாகனங்களில் தங்கி உள்ளனர்.
* கலாமுக்கு இரங்கல் தெரிவித்து, பெரும்பாலான ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், நேற்று மூன்றாவது நாளாக மூடப்பட்டன. திறந்திருந்த சில ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
* ராமேஸ்வரத்திற்கு வரும் அனைவரும், கலாம் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தை பார்வையிட்டு, மொபைல்போனில் படம் எடுத்துச் செல்கின்றனர்.
*கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள்,
பல்வேறு மாநில முதல்வர்கள் வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
*கடலோர பகுதிகளில், மத்திய அரசின் என்.எஸ்.ஜி., பாதுகாப்பு படையினர், நவீன ஹெலிகாப்டரில் ரோந்து வருகின்றனர்.