ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நாளை மாலை வெளியிடப்படுகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் சுமார் 4.5 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வெழுதினர். இவர்களில் 16 ஆயிரத்து 933 பேர் தேர்ச்சி பெற்று பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். ஆனால், டிசம்பர் மாதம் நடந்த பிரதான தேர்வில் 16 ஆயிரத்து 286 பேர் மட்டுமே பங்கேற்றனர். மார்ச் மாதம் பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், 3308 பேர் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏப்ரல் 27-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற்ற நிலையில், நாளை இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நேர்முகத் தேர்வு முடிந்த 4 நாட்களுக்குள் இறுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவது இதுவே முதல் முறை என்றும் யுபிஎஸ்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.