எஸ்.ஐ., பணிக்கான தகுதி தேர்வு:வீடியோவில் பதிய உத்தரவு

கோவை:போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான உடற்கூறு தகுதி தேர்வை, 'வீடியோ கேமரா' மூலம் பதிவு செய்ய, அதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர். சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், மாநிலம் முழுவதும், 1,078 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த, மே, 23, 24ம்
தேதிகளில்நடத்தப்பட்டது.பொது பிரிவினர் மற்றும் காவல் துறையில் பணியாற்றுவோருக்கு, தனித்தனியாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வுக்கான முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் ஆகஸ்ட், 3ம் தேதி, தமிழகம் முழுவதும், 11 மையங்களில், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், குண்டு ஏறிதல் போன்ற உடற்கூறு தகுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சீருடை பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் டி.ஜி.பி., சுனில்குமார் சிங், நேற்று கோவை போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:ஆண் மற்றும் பெண்களுக்கு, தனியாக உடற்கூறு தகுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முறைகேடு புகார்களை தவிர்க்க, ஒவ்வொரு நபரின் உடற்கூறு தேர்வும், 'வீடியோ' மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
உடற்கூறு தேர்வின் முடிவுகள், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, சென்னையில், நேர்முக தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்