அரசு மானியங்கள் பெற ஆதார் கட்டாயம் விவசாயிகளுக்கு வேளாண் துறை உத்தரவு

மாநிலம் முழுவதும், ஒரு கோடிக்கும் மேலான விவசாயிகள் உள்ளனர். இதில், 81 லட்சம் பேருக்கு, ஒருங்கிணைந்த விவசாய கையேடு வழங்க திட்டமிட்டு, 65 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.


கையேடு பெற்ற விவசாயிகள் மூலம் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து, இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் விதைகள், உரங்கள், நுாண்ணுாட்ட சத்துக்கள்
உள்ளிட்ட இடுபொருட்கள்; வேளாண் கருவிகளும், இயந்திரங்களும் மானிய விலையில்
வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான நிதியை, மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும்
வழங்குகிறது.இந்த நிலையில், மானிய திட்டங்களில் பலன் பெற விரும்பும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகளிடமும் நேரடியாக அறிவுறுத்தப்படுவதோடு, குறுஞ்செய்திகளையும் அனுப்பி வருகிறது.