அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் பள்ளி மானிய, பராமரிப்பு நிதி வழங்குகிறது. பள்ளிகளின் எண்ணிக்கையை பொறுத்து
2 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மானிய நிதியில் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். பராமரிப்பு நிதியில் கழிப்பறை வசதி, கூடுதல் கட்டடம், கட்டடம் பழுது பார்த்தல் போன்ற பல்வேறுதிட்ட பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்தது.
இவ்வாண்டுக்கான பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதார மேம்பாடுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும் போதிய கழிப்பறை வசதி, இரு பாலர் பள்ளிகளில் தனித்தனி கழிப்பறை, பழுதான கழிப்பறைகளை பழுது பார்த்தல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், தரை மட்டம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 'செப்டிக் டேங்க்' ஏற்படுத்துதல், தண்ணீர் பற்றாக்குறைக்கு போர்வெல் அமைத்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட
எஸ்.எஸ்.ஏ., கல்வித்திட்ட அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.