அப்துல் கலாமுக்கு என்ன நேர்ந்தது?

டில்லியில் இருந்து அப்துல் கலாம் உடலுடன் வந்த, அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், நேற்று, கீழக்காடு மைதானத்தில் நமது நிருபரிடம் கூறியதாவது:உடல் சற்று பலவீனமாக இருந்தாலும் கூட, அதை பொருட்படுத்தாமல், மாணவர்கள் சந்திப்பில் அலாதி ஆர்வம் காட்டுவார் கலாம்.

கடந்த, ஜூலை 27ம் தேதி, ஷில்லாங்கிற்கு சென்றார். படி ஏறும்போது, அவருக்கு சற்று இளைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் மேடையில் ஏறி பேசச் சென்றுள்ளார்.
டாக்டர்கள் சந்தேகம்
பொதுவாக மலை பிரதேசங்களில் ஆக்சிஜன் குறைவு. அப்போது மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

வைகோ - வெங்கையா ஆலோசனை

ராமேஸ்வரம் கீழக்காடு மைதானத்தில், அப்துல் கலாம் உடல் வருவதற்கு முன்பாக, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ வந்தார். அவர் இருக்குமிடத்திற்கு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்று சிறிது நேரம் பேசினார். பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேனை கண்ட வைகோ, எழுந்து சென்று, அவரை கட்டித் தழுவி பேசினார்.அஞ்சலி செலுத்திச் சென்ற மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு ஆகியோர், மீண்டும் அங்கு இரவு, 7:00 மணிக்கு வந்தனர்.இறுதி நிகழ்வு குறித்து கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

'கலாம் தந்த உத்வேகம்'
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நிஜந்தன். வலது கை, கால் கிடையாது. அப்துல் கலாமின் புத்தகத்தை படித்து, தன்னம்பிக்கை பெற்றவர்.அவருக்கு அஞ்சலி செலுத்த, அங்கிருந்து பல பஸ்களில் ஏறி இறங்கி, மண்டபம் கேம்ப் வந்தார். அங்கு போக்குவரத்து நெரிசலில் பஸ்கள் நிற்கவும், அங்கிருந்து, தத்தி தத்தி வாகனங்களில், 'லிப்ட்' கேட்டு, கீழக்காடு மைதானத்திற்கு வந்து, கலாமுக்கு அஞ்சலி செலுத்தினார்.அவர் கூறுகையில், ''ஒரு முறையாவது அவரை பார்த்து விடவேண்டும் என, ஏங்கி இருந்தேன். அதற்குள் அவர் மறைந்து விட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என வந்தேன்,'' என்றார்.

காலை - மாலை வரை

அப்துல் கலாம் உடல் ராமேஸ்வரம் வருவதற்கு முன்பே, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அதிகாலை, 5:00 மணிக்கு முன்பே கீழக்காடு மைதானத்தில் ஏராளமானோர் திரளத் துவங்கினர். மைனுதீன் என்ற பெண், 5:00 மணிக்கு வந்து அமர்ந்தார். அவரை போலீசார் அவ்வப்போது அப்புறப்படுத்தினாலும், முதல் ஆளாக அஞ்சலி செலுத்த போவதாகக் கூறி, மாலை வரை அங்கேயே காத்திருந்தார்.- நமது நிருபர் -