அப்துல் கலாம் பெயரில் விருது ; தமிழக அரசு அறிவிப்பு

மறைந்த அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கும் என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். 
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த 27 ம்தேதி திடீரென
ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நேற்று ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் கலாம் பெயரில் விமான நிலையத்திற்கு பெயர், ராமேஸ்வரத்தில் மணிமண்டபம், கலாம் பெயரில் பல்கலை., கலாம் இல்லம் குழந்தைகள் காட்சியகம் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் ஒருமுக சிந்தனை, விடாமுயற்சியால் , தலைசிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், திருக்குறள் வழி நடந்தவர். இளைஞர்களின் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சக்தியாக திகழ்ந்தவர். அனைவராலும் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த இவருக்கு பெருமை சேர்க்க , கலாமின் நினைவை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான அக். 15 இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும்.
8 கிராம் தங்கம்- ரூ. 5 லட்சம் ரொக்கம்: மேலும் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் அப்துல்கலாம் பெயரில் அரசு விருதுகள் வழங்கப்படும். அறிவியல் வளர்ச்சி, மாணவர்கள் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அந்த நபருக்கு இந்த விருது வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ . 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இவ்வாறு இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பும் , அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.