நாடு முழுவதும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு திட்டம்.

புதுடில்லி: நாடெங்கிலும் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நாடா தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சுகாதார மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாநாட்டில் பேசிய அவர், நாட்டில் உள்ள 16 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளின் ஆரோக்கியத்தை அடுத்த 1.5 ஆண்டுக்குள் 95 சதவிகிதம் அளவிற்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்கு குறைந்த செலவிலான, திறன் மிக்க மருந்துகள் உற்பத்தி அவசியம். திட்டம் வெற்றியடைய தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவை.

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய ஆரோக்கிய மிஷனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் உள்ள 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு தேவையான நோய் தடுப்பு மருந்து மற்றும் போலிக் அமிலங்கள் வழங்கப்படும்.. இதனால் கடந்த 25 ஆண்டுகளில் இருந்ததை விட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் பெறுமளவு குறைந்திருக்கிறது.

இந்திரதனுஷ் திட்டத்தால் நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பகுதிகளில் 53 லட்சம் குழந்தைகள் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கு கிராமப்புறங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்