நிபந்தனைகளுடன் கலந்தாய்வு அறிவிப்பு: ஆசிரியர்கள் அதிருப்தி

ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த, பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கலந்தாய்வு நடைமுறையில், அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் சங்கங்களின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின், கலந்தாய்வு நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்து, புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
* ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, காலிப்பட்டியல் தயாரித்து, கலந்தாய்வு நடத்தப்படும்.
* உபரி ஆசிரியர் பணி நிரவல் முடித்து, அதன் பின்னரே, காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்; உபரியான காலியிடங்களில் பணி மாறுதல் கிடையாது.
* குறைந்தது, மூன்று ஆண்டு பணியாற்றியோருக்கு மட்டுமே, கலந்தாய்வு நடத்தப்படும். பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி, ராணுவ வீரர்களின் மனைவி, இதய சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளி பிள்ளைகள் கொண்ட ஆசிரியர், கணவன் - மனைவி இருவரும் அரசு பணியிலுள்ளோர் ஆகியோருக்கு, மூன்றாண்டு பணி கட்டாய நிபந்தனையில் விலக்கு அளிக்கப்படும். (கடந்த ஆண்டு வரை, ஓரு ஆண்டு பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது).
*ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என எந்த விதமான, மற்ற துறை பள்ளிகளுக்கும் இட மாறுதல் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. (அலகு விட்டு அலகு மாறுதல் என்ற இந்த மாறுதலும், கடந்த ஆண்டு வரை அமலில் இருந்தது)
*முதலில், புகாருக்கு உள்ளானவர்களுக்கு, விருப்பமில்லாத பணி மாறுதலை வழங்கி விட்டு, மீதி இடங்களில் பொது மாறுதல் தர வேண்டும்.
* கலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்)
இவ்வாறு, மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு, ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன் கூறும்போது,''கலந்தாய்வை, இரு மாதங்கள் தள்ளிப் போட்டதுடன், நியாயமற்ற நிபந்தனைகளை புதிதாக சேர்த்திருப்பது கண்டனத்துக்குரியது. இது, ஆசிரியர்களிடம் வேதனை, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலர் ராபர்ட் கூறும்போது, ''ஆசிரியர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில், கடும் நிபந்தனைகளை, அரசு அறிவித்துள்ளது. இதனால், கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கும்,'' என்றார்.