தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



   நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் காலியாக உள்ளன.



அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான 125 பணியிடங்களில் 65-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு, பரமக்குடி ஆகிய இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் உள்பட 65 பணியிடங்கள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


வரும் ஜூலை 31-ஆம் தேதி மாவட்ட அளவில் மேலும் சில கல்வி அலுவலர்கள் ஓய்வு பெறுகின்றனர். எனவே, கற்றல், கற்பித்தல் மேற்பார்வைப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், 600-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.