அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்! 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு

'அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


        நாட்டு மக்கள் அனைவருக்கும், தனித்தனியாக, பிரத்யேக அடையாள எண் வழங்கும் நோக்கத்துடன், 'ஆதார்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் போட்டோ எடுத்து, கைரேகை, கருவிழி பதிவு செய்தவர்களுக்கு, 'ஆதார்' எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன.இவ்வாறு வழங்கப்படும் 'ஆதார்' அட்டைகள், முக்கிய அடையாள ஆவணமாக, மத்திய, மாநில அரசுகளால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

அரசு நலத்திட்ட உதவிகள், தேவைப்படுவோரை நேரடியாக சென்றடையவும், மானியத்திட்டங்களை போலியான நபர்கள் பெறுவதை தடுக்கவும், அனைவரும் 'ஆதார்' எண் சமர்ப்பிக்க வேண்டும் என்று, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதன் முதற்கட்டமாக, காஸ் மானியம் பெறும் திட்டத்தில், 'ஆதார்' எண் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து வருகிறது. தற்போது, 'தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும், உடனடியாக ஆதார் எண் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்' என்று, கருவூல கணக்குத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

'வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்' என்று, அந்த சுற்றறிக்கையில், கணக்குத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அரசுப்பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''தமிழகம் முழுக்க, மூன்று லட்சம் நிரந்தர அரசுப்பணியாளர்களும், மூன்று லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் உள்ளனர். ஆதார் எண் கட்டாயம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

கால அவகாசம் என்பதையும், சம்பளத்தை நிறுத்துவது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி செய்தால் நாங்கள் போராட்டத்துக்கு தள்ளப்படுவோம்,'' என்றார்..3

சம்பளத்தில் பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்படும் தனியார் நிறுவன ஊழியர்களிடமும், ஆதார் எண் சேகரிக்கும் பணியை, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளன.