பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வு
இயக்ககம் தெரிவித்தது.
இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வுகள் உள்பட) தேர்வு முடிவை, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த இணையதள முகவரிக்குள் சென்றவுடன் "Provisional Mark Sheet HSC Result- June 2015' என்ற "Screen' தோன்றும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை தட்டச்சு செய்ய வேண்டும். மேலும், திரையில் தோன்றும் குடியீட்டினை (Code) அதில் உள்ளது போலவே தட்டச்சு செய்ய வேண்டும். அதையடுத்து "View Result' Gu\ "Option'-ஐ கிளிக் செய்ய வேண்டும். அப்போது தேர்வர்கள் பெயரில் PDF File  பதிவிறக்கம் ஆகும். மேற்கண்ட கோப்பில் தேர்வருக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இருக்கும். அதை தேர்வர்கள் அப்படியே பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
விடைத்தாள், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: 2015-ஆம் ஆண்டு தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு 20.7.2015 முதல் 22.7.2015 வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் இணையதள பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ ரொக்கமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு பகுதி-1 மொழி, பகுதி 2 மொழி (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு தலா ரூ.550-ம், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதேபோல, மறு கூட்டலுக்கு பகுதி 1 மொழி, பகுதி 2 மொழி (ஆங்கிலம்), உயிரியல் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305-ம், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும்- ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் எப்போது? விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைப் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Applicaion Number)-ஐ பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத் தாள்களின் நகல்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், மறு கூட்டல் பற்றியும் அறிய முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.