பிளஸ் 2 பாடங்களுக்கு 'சிடி':தனியார் பள்ளிகள் நெருக்கடி

பொதுத்தேர்வுக்கென, தனியார் நிறுவனங்கள் தயாரித்துள்ள, 'சிடி'க்களை வாங்குமாறு, மாணவ, மாணவியரை, தனியார் பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுப்பதாக, புகார் எழுந்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகளை, அரசு இலவசமாக வழங்குகிறது. ஆனால், விளக்க கையேடான, 'நோட்ஸ்'களை, தனியார் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.


இந்நிலையில், கடந்த கல்வி ஆண்டு, நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், நோட்ஸ் கையேட்டுடன், 'சிடி'க்களை, இலவசமாக வழங்கின. ஆனால், இந்த ஆண்டு, இலவசத்தை, 'கட்' செய்து, தனியாக விற்பனை செய்கின்றன.மும்பையைச் சேர்ந்த நிறுவனம், பிளஸ் 2, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு, 'சிடி' வெளியிட்டுள்ளது. ஆறு மணி நேரம் ஓடக் கூடிய ஒரு, 'சிடி'யின் விலை, 750 ரூபாய். ஒரு பாடத்துக்கு, இரண்டு, 'சிடி'க்கள் வீதம், 1,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இவற்றை, மாணவ, மாணவியர் வாங்கும்படி, சில தனியார் பள்ளிகள் நெருக்கடி கொடுப்பதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, 'சிடி' விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என, பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது