பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைந்தது

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதை அடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன.


இதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்குப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.2.55 குறைந்து, ரூ.67.29 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.44 குறைந்து ரூ.51.08 ஆகவும் விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

அமைச்சர் நம்பிக்கை:

வளர்ந்த நாடுகளுடன், ஈரான் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தால், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன. இதனால், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை வெகுவாகக் குறையும் என, மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது, ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடு கள் பொருளாதாரத் தடைகள் விதித்தன. இந்நிலையில், தங்கள் நாட்டின் அணு உலைகள் மற்றும் அணுசக்தி நிலையங்களை, சர்வதேச அணுசக்தி அமைப்பினர் ஆய்வு நடத்துவது உட்பட பல நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு, நேற்று முன்தினம், வளர்ந்த நாடுகளுடன், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒப்பந்தத்தை ஈரான் மதித்து நடக்கிறது என, ஐ.நா., பார்வையாளர்கள் சான்றிதழ் அளித்ததும், அமெரிக்க பார்லிமென்டில், ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும், 2 - 3 மாதங்களில், பொருளாதாரத் தடைகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.அடுத்து, உலகின் பெரிய, பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு, பெட்ரோல் விற்பனைக்கு அனுமதி கிடைத்து விடும்.பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், இந்தியாவுக்கு மிக அருகாமையில், ஈரான் உள்ளது என்பதால், அங்கிருந்து ஏராளமான அளவில் பெட்ரோலியப் பொருட்கள், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும்.அப்போது, விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது.

பெட்ரோலிய சந்தையில், பழைய படி ஈரான் வரும் போது, விலை வீழ்ச்சி அடையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால், பெட்ரோலியப் பொருட்கள் விலை வீழ்ச்சி அடையும்.
தர்மேந்திர பிரதான்
பெட்ரோலியத்துறை அமைச்சர், பா.ஜ.,

இது தான் புள்ளிவிவரம்
●பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில், உலகின் நான்காவது பெரிய நாடு இந்தியா.
●ஈரானில் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடுகளில், இரண்டாவதாக இந்தியா உள்ளது. முதலிடத்தில், சீனா உள்ளது.