குரு பெயர்ச்சி பலன்கள் 2015

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய)

உங்களுக்கு இதுவரை 4ல் இருந்த குரு 5ம் இடத்தில் பிரவேசிக்கிறார். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் நெருங்கி வந்திடுவர். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சிலருக்கு மழலைச் செல்வம் உண்டாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. கௌரவம் குறைவது மாதிரியான சம்பவங்கள் இதுவரை
நடந்திருந்தால், அவை விலகி ஒரு மறுமலர்ச்சி தோன்றும். வியாதிகள் இருந்தால் குணமடையும். குருவின் பார்வை படும் ராசியும், ராசிக்கு 9ம் இடம் மற்றும் லாபஸ்தானமும் நல்ல பலன்களை அதிகம் தரும். 20.12.15 முதல் 07.02.2016 வரை அதிசாரமாக கன்னி ராசியில் குரு பிரவேசிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சில துயரமான சம்பவங்கள் நடக்கலாம், வழக்கு தொல்லைகள், கடன் தொல்லையில் மாட்டி அவஸ்தைப்படுதல் போன்றவை சிலருக்கு இருக்கலாம். கவனம் தேவை. ஜீவனம், உத்தியோகம் போன்றவற்றில் சிக்கல்கள் உண்டாகலாம். சிலருக்கு வேலையும் போகலாம். தொழில் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வையால் சில கஷ்டங்கள் தீரும். வக்ரகதியில் சிம்மத்துக்கு ஜனவரி 9 முதல் பிரவேசிக்கும் காலகட்டம் ஓரளவு பெருமூச்சு விடுவதாயும், வக்ர நிவர்த்தி ஆகி ஆகஸ்டு 3 வரை நல்ல நிலை தோன்றி எடுத்த காரியங்களில் முன்னேற்றம், சிலருக்கு புதுவீடு புகும் யோகம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவை உண்டாகலாம். சனியின் வக்ர பிரவேச காலம், ராகு குருவுடன் சேர்ந்திருக்கும் காலம் ஆகியவை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடும் காலமாய் அமையும்.

ரிஷபம்


(கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)

இதுவரை 3ல் இருந்து அப்படி ஒன்றும் பலன் தரவில்லை என்ற நிலையில் இருக்கும் குரு 4க்குப் பெயர்கிறார். இதுவாவது நன்றாக இருக்கிறதா என்றால் சுமார் தான். ஆனால் குரு பார்வை படும் 10ம் இடம் ஓரளவு நல்ல சூழலைக் கொண்டுவரும். கண்டச் சனி பார்வை 4ம் இடத்து குருவுக்கு இருப்பதால் குடும்பத்தில் ஒரு குதூகலம் உண்டாகும். அதே நேரம் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும். சிலருக்கு கடன் தொல்லையால் அவஸ்தையும் உண்டாகும். கவனம் தேவை.

நல்ல காலம் வராதா என்று ஏங்கும்போது 20.12.15 முதல் 07.02.2016 வரை அதிசாரமாக கன்யாவில் குரு பிரவேசிக்கிறார். ‘வந்தாச்சுப்பா நல்ல காலம்’ என்று அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிக மகிழ்ச்சி உண்டாகும் காலம் இது. வீடு கட்டும், வாங்கும் யோசனை இருந்தால் அது நிறைவேறும். குருவுக்கு 3ல் இருக்கும் சனி ஓரளவு ஒத்துழைப்பும் தரும். கேதுவின் பார்வையும் பலனைத் தரும். திரும்ப வக்ரமாய் சிம்மத்துக்குப் பெயர்ந்து வக்ரகதி காலம் முடிய பரவாயில்லை எனப் பெருமூச்சு விடலாம். அடுத்த ஆகஸ்டுக்குப் பிறகே மறுபடியும் நல்ல நிலை தோன்றும்.

கிரஹங்கள் நன்மை தரும் நிலையில் இருப்பதாலும் இன்னும் கொஞ்சம் நன்மை உண்டாக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்


(மிருகசீரிடம் 3,4, திரு வாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)

இதுவரை 2ல் இருந்து பொருளாதார முன்னேற்றம், உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் ஒற்றுமை என்று கொடுத்துக் கொண்டிருந்த குரு 3ம் இடத்தில் இனி பிரவேசிக்கிறார். இது கொஞ்சம் பலம் குறைவுதான்; ஆனால் பார்வை 7, 9, 11ம் இடத்துக்கு இருப்பதால் வருகின்ற கஷ்டங்களைச் சமாளித்து விடுவீர்கள். அரசாங்க உதவி அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்போருக்குக் கொஞ்சம் துன்பம் ஏற்படும். வக்ர சனியும் துலாத்துக்குச் சென்று கொஞ்சம் சிரமத்தைத் தருகிறார். இருந்தாலும் மனோதிடம் அதிகம். அதனால் உங்களுக்கு வரும் துயரங்கள் தூசாய்ப் பறந்துவிடும்.

குரு அதிசாரமாய் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகும் நேரம் குடும்பத்தில் குதூகலம், பொருளாதார முன்னேற்றம், உடன் இருக்கும் ராகுவால் நன்மை என ரொம்பவே நல்லதாய் நடக்கும். வியாதிகள் இருந்தால் உடன் சரியாகும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் தேவைகளை விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.

குரு மீண்டும் வக்ரமாய் சிம்மத்துக்குத் திரும்பி வக்ர நிவர்த்தி ஆகும் வரை ஓரளவு நல்ல பலன் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். ஜனவரியில் வரும் ராகு பெயர்ச்சி மிகுந்த நற்பலனை அள்ளித்தரும். குருவுடன் சேர்ந்து சுப நிகழ்வுகளை உண்டாக்கி ஒரு மகிழ்ச்சியைத் தரும். நோய்கள் அகலும். சிலருக்கு புத்திரபாக்கியம், தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)

ஜென்ம குரு வனவாசம் என்பார்கள். அதுபோல இதுவரை கஷ்டங்களையும், அசுப பலனாகவும் தந்து கொண்டிருந்த குரு உங்கள் வாக்கு ஸ்தானத்துக்கு மாறி உற்சாகப்படுத்துகிறார்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட துறைகளில் பூரண வெற்றியைக் காணலாம். திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் அனைவரும் நோய் நொடியின்றி இருப்பர். மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்தி நல்ல பெயரைப் பெறுவார்கள். அரசாங்கத்தின் தயவை, காரியங்களை எதிர்பார்த்து இருப்பவர்களுக்குச் சாதகமாய் அமையும்.

குருவின் அதிசார வக்ரமாய் கன்னி ராசிக்குப் போகும் 20.12.15 முதல் 09.02.16 வரையிலான கால கட்டங்களில் சில சங்கடங்கள் வரலாம். இந்த நேரத்தில் ராகுவின் பெயர்ச்சி வேறு தொந்தரவு தரும். ஆனால் கேது நன்மை தருவதாய் அமைவதால் ஓரளவுக்கு நிம்மதி கிட்டும். சனி மறுபடியும் விருச்சிகத்துக்கு மாறி பெருமூச்சு விடும்படி செய்கிறார். இந்தக் காலகட்டம் கலந்துகட்டி நன்மையும் தீமையும் வருகிறது. இருந்தாலும் மனோதிடம் சமாளித்துவிட செய்யும். மீண்டும் வக்கிரமாய் இரண்டாம் இடத்துக்குப் போகும் குரு கடைசிவரை நன்மை தருகிறார். இதில் அரசியல்வாதிகளும் பெண்களும் கொஞ்சம் சிரமத்தை அனுபவிப்பர்.

சிம்மம்


(மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய)

இதுவரை விரயத்தில் இருந்து பார்வையால் மட்டும் நன்மை செய்த குரு இனி ஜென்மத்துக்கு வருகிறார். இதுவும் அப்படி ஒன்றும் முன்னேற்றத்தைத் தராது; எனினும் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சனியின் வக்ர சாரம் செப்டெம்பர் 15 வரை மிகுந்த நல்ல பலன்களை உண்டாக்கும். குருவின் பார்வை ராசிக்கு 5, 7, 9 பாவங்களில் படுவதால் வழக்கிலிருந்து விடுதலை, செயல்களில் வெற்றி உண்டாகும். கௌரவ பாதிப்பு இருந்தாலும், எதிர்பாராத நன்மை உண்டாகும். நண்பர்கள், வெளி மனிதர்களிடம் கவனம் தேவை. வார்த்தைகளை விடும்போதும் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் இருக்கும் ராகுவால் தொல்லை ஏற்படலாம்.

எப்போது இந்தக் கஷ்டத்திலிருந்து விடுதலை என்றால், குரு அதிசாரமாய் கன்னி ராசிக்குச் செல்லும் 20.12.15 முதல் 07.02.16 கால கட்டத்தில் வெற்றிமேல் வெற்றியாக வரும். எல்லா விஷயங்களிலும், குறிப்பாகப் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இன்னும் நிறைய சந்தோஷங்கள் உண்டாகும்.

மீண்டும் வக்ரமாய் ராசியில் பிரவேசிக்கும்போது ஓரளவு நன்மை தரும். சனியின் மாறுதல் மற்றும் ராகு, கேது பெயர்ச்சி ஆகியவை மறுபடியும் கஷ்டத்தைக் கொடுக்கும். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஓரளவு நன்மை நடக்கும்.கன்னி

(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய)
உங்களுக்கு இதுவரை லாபத்தில் இருந்து அதிக நன்மை செய்த குரு, இப்போது விரயத்துக்கு வருகிறார். இதில் சில சுப விரயங்களும் உண்டாகும். ஸ்தல யாத்திரை, இறைவழிபாடு என மனம் செல்லும். குடும்பத்தில் மருத்துவச் செலவையும் உண்டாக்கும். குருவின் பார்வை ஓரளவு நன்மை தந்தாலும் சனி வாக்கில் வந்து துன்பத்தைச் செய்துவிட்டு போகும். ஜென்மத்தில் இருக்கும் ராகுவும் சில கஷ்டங்களைத் தரும். குருவுடன் சேரும் சூரியன், செவ்வாய் மற்றும் புதன் அந்தக் கால கட்டங்களில் ஓரளவு நன்மை தருவதாக இருக்கிறது.

அதிசாரமாய் ஜென்ம ராசிக்கு குரு வரும் கால கட்டம் சில அசுப பலன்களைத் தருகிறது. ஆனாலும் குருவின் பார்வை நற்பலனைத் தரும் என நம்பலாம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. இந்தக் கால கட்டத்தில் மனத்தை உறுதியாக வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால் குருவினால் வரும் அசுப பலன்கள் பாதிப்பைத் தராது.

மீண்டும் வக்கிரமாக விரயத்தில் வரும் குருவால் ஓரளவே நன்மை உண்டாகும். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் குரு பார்வையின் பலன் மட்டுமே முழுமையாய் கிடைக்கும். மற்ற கிரஹங்களின் தன்மையும் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமையையும் கவனத்தில் கொண்டே பாதிப்புகள் குறைவாக இருக்குமா என்பதை அறிந்துகொள்ள முடியும். உங்களது தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் இது அதிகரிக்கும். குறிப்பாக, அரசியல்வாதிகள், பத்திரிகைத் தொழிலில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆகியோர் தங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டு குருபலன்களை அறிந்து கொள்வது நலம்.

துலாம்


(சித்திரை 1,2, ஸ்வாதி, விசாகம் 3 பாதம் முடிய)

குடும்பத்தைக் காப்பவராயும் தன்னுடைய நிலையிலிருந்து மாறாதவராயும் இருக்கும் நீங்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். இதுவரை 10ல் இருந்து அனைத்து காரியங்களிலும் விக்னத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த குரு லாபத்துக்கு வருகிறார். இது உங்களை உயர்த்திக் கொள்ளும் நேரம் ஆகும். சனி ஜென்மத்தில் வந்தாலும் கவலை வேண்டாம்; குருவின் பார்வை அதைச் சரி செய்யும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ் தர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். தொழில் முனைவோர் முன்னேற்றம் காண்பர். அரசியல் வாதிகளுக்கு அந்தஸ்து உயரும்; பெயர் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவர். பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் அனைத்து பிரிவினருக்கும் நல்ல சூழல் ஏற்படும்.

குரு அதிசாரமாய் உங்கள் ராசிக்கு 12ம் இடத்துக்குச் செல்வதைப் பற்றிக் கவலை வேண்டாம். அது சுப விரயமாகவும், ஸ்தல யாத்திரை செல்வதாகவும் அமைந்துவிடும். பரவாயில்லை, குரு சிரமம் தரவில்லை என்ற நிம்மதி வரும். இந்தக் காலகட்டத்தில் சனி மீண்டும் 2ம் இடத்துக்குச் போய் ஓரளவு நன்மை செய்கிறார்.

ஜனவரி 16 அன்று வக்கிரமாய் திரும்ப லாபஸ்தானத்துக்கு போகும் குருவுடன் ராகுவும் சேர்கிறார். இது மேலும் பலத்தைத் தரும். ராகுவால் வெளிநாட்டுத் தொடர்புகள், வெளி மனிதர்கள் தொடர்புகள் நன்மை தருவதாய் அமைகிறது.

பொதுவாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிக நன்மை தருகிறது. உற்சாகமாக இருங்கள்.

விருச்சிகம்


(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய)

பாக்கியத்தில் இருந்த குரு பத்துக்குச் செல்கிறார். இது தொழில் அல்லது உத்தியோகத்துறைக்குச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். சில சமயம் கௌரவ பாதிப்பையும் தரும். சனி வேறு வக்ரமாய் விரயத்துக்குப் போவது மேலும் துன்பத்தை அதிகரிக்கும். இருந்தாலும், அதற்கு குருவின் பார்வை இருப்பது சிரமத்தைக் குறைக்க உதவும். வாக்குக் கொடுப்பதைக் கவனத்துடன் செய்யவும். ராகுவால் நன்மை இருந்தாலும், குரு அதைக் குறைக்கும் நிலையில் உள்ளது. கொஞ்சம் சிக்கல் விழுந்த நூல்கண்டை பிரிப்பது போல வாழ்க்கை இருக்கும். முருக நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள். பெண்களும், சுயதொழில் செய்பவர்களும் கொஞ்சம் உஷாராக இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அதிசாரமாய் கன்னி ராசிக்குக் குரு பெயர்வதும் பின் வக்ரமாய் சிம்மத்துக்கு வரும் கால கட்டங்களும் ஓரளவு நன்மை தருவதாக இருக்கும். இழந்த பதவி திரும்பக் கிடைக்கும். புதிய பூமி, வீடு, வாகன யோகங்களும் இந்தக் காலகட்டத்தில் உண்டாகும்.

பொதுவாக, வக்ரம் நிவர்த்தியாகும்போது சுமாராகவும் அடுத்த ராசிக்கு பெயர்ந்தவுடன் நன்மை கள் அதிகம் கிடைப்பதாகவும் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அமைகிறது. இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால் குரு பெயர்ச்சியால் விளையும் சிரமத்தை ஓரளவு குறைக்கும்.

தனுசு


(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)

உங்களுக்கு இதுவரை அட்ட மத்தில் படுத்திக் கொண்டிருந்த குரு 9ஆம் இடத்துக்குப் பெயர்கிறார். இது ஒரு நல்ல ஸ்தானம். சகலபாக்கியங்களும் சித்திக்கும். குரு சிம்மத்தில் இருக்கும் ஒரு வருடமும் உங்களுக்குத் துன்பம் நேராது. புத்திரன் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வியாபாரம், செய்தொழில், உத்தியோகம் போன்ற ஜீவன வகையில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு ஒரு ஏற்றமான காலம் இது. வெளித்தொடர்புகள் மிகுந்த நன்மை தரும். இதுவரை இருந்துவந்த அனைத்துச் சிக்கல்களும் அகன்றுவிடும்.

அதிசாரமாய் உங்கள் ராசியிலிருந்து 10ஆம் இடமான கன்னி ராசிக்குக் குரு செல்லும்போது உத்தியோகம் மற்றும் தொழிலில் மாற்றம் வரும். அடிக்கடி பிரயாணம் செய்ய நேரலாம். வாயு, பித்தம் சம்பந்தமான வியாதிகள் தோன்றும். அனைத்துக் காரியங்களிலும் கொஞ்சம் சிரமம் ஏற்படும்.

மீண்டும் வக்ரமாய் 9ஆம் இடத்துக்கு குரு வரும்போது ஓரளவு நன்மையும் வக்ர நிவர்த்தி யாகும்போது மேலும் நன்மையும் நடக்கும். சனியாலும் ராகுவாலும் அதிக நன்மை என்று சொல்ல முடியாது. ஆனாலும், கெடுதல் இருக்காது என்பது உறுதி.

மகரம்


(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)

இதுவரை 7ல் இருந்து நன்மை செய்துவந்த குரு அஷ்டம ஸ்தானத்துக்குப் போவது அனைத்து காரியங்களிலும் தடையை ஏற்படுத்தும். உத்தியோகம், செய்தொழில் இவற்றில் நஷ்டத்தைக் கொண்டுவரும், கைக்கு எட்டக்கூடியது வாய்க்கு எட்டாமல் போகும் வாய்ப்பு அதிகம். அதே நேரம் பார்வை பலத்தைத் தரும். மேலும் ராசியாதிபதி சனி வக்ரமாய் துலாத்தில் சஞ்சரிக்கும் நேரம் ஓரளவு நன்மை தரும்.

அதிசாரமாய் கன்னி ராசிக்குப் பெயரும் குரு 20.12.15 முதல் 7.2.16 வரையிலான காலகட்டம் சிறந்த காலம். இந்த நேரத்தில் எல்லாம் வெற்றியைத் தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இது வரை இருந்துவந்த கஷ்டங்கள் மாறி நல்ல சூழல் உண்டாகும். சனி வக்ர சஞ்சாரம், ராகு பெயர்ச்சி நன்மை தருவதாய் அமைகிறது. இந்த நேரங்களில் உங்கள் முயற்சிகளைத் தொடங்கலாம். அதில் வெற்றி உண்டாவது நிச்சயம்.

வக்கிரமாய் திரும்ப 8ம் இடத்துக்கு வரும் காலம் வக்ர நிவர்த்திவரை ஓரளவு நன்மை தரும். அதன் பின் சுமாரான நிலை உண்டாகும்.

தொழிலாளர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். தெய்வ வழிபாடு நன்மை செய்யும்.

கும்பம்


(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய)

வாசனைத் திரவியங்கள், ஆடம்பரப் பொருட்கள் மீது ஆசையும் வாழ்விலே ஏற்ற இறக்கங்களையும் சந்தித்துக் கொண்டிருப்பதுமான நிலையில் உள்ள உங்களுக்கு இதுவரை 6ல் அமர்ந்து சில கஷ்டங்களைத் தந்து கொண்டிருந்த குரு 7ம் இடத்துக்குப் பெயர்கிறார். மனைவி, கணவர் மூலம் அதிக மகிழ்ச்சி உண்டாகும். தொழில் கூட்டாளியால் அதிக அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களில் ஈடுபடுவது, பொருள் வரவு, புத்திர பாக்கியம், திருமணத் தடை நீங்குதல் போன்றவை உண்டாகும் நேரம் இது. மனம் கொண்டவரின் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கடந்த கால கசப்புகள் மாறி, புதிய உத்வேகம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள், பத்திரிகையாளர்களுக்கு இது ஒரு நல்ல காலம். பதவி, புகழ் சேரும். உத்தியோகஸ்தர்கள் இதுவரை இருந்துவந்த தடை நீங்கி புத்துணர்ச்சி பெறுவர்.

குரு அதிசாரமாய் அஷ்டம ஸ்தானத்தில் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகும் காலகட்டங்கள் கொஞ்சம் இறக்கம், தொய்வு ஏற்படும். உடல், மனரீதியான கஷ்டங்கள் வரலாம். குடும்பத்தில் குதூகலம் குறையலாம். இருந்தாலும் குருவின் பார்வை பலம் தரும். ராசியாதிபதி சனியின் வக்ர சஞ்சாரம் இதைச் சரி செய்யும். ராகுவின் பெயர்ச்சியும் ஓரளவு கெடுபலனைக் குறைக்கும். வக்கிரமாகத் திரும்ப 7ம் இடத்துக்கு வரும் குரு அடுத்த ராசிக்குச் செல்லும்வரை அதிக நல்ல பலன்களைத் தருவார்.

மீனம்


(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நன்றாகச் சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கை இனி கொஞ்சம் சிரம தசையில் போகும். குரு இதுவரை 5ல் இருந்து நற்பலன் தந்தார். அது 6க்குப் போவதால் பொருளாதாரம் பாதிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் தடை வரலாம். உறவினரே பகையாவார். கடன், வழக்கு பாதிப்பைத் தரும். இருந்தாலும் குருவின் பார்வை ஓரளவு நலம் தரும். ஜீவன வகையில் பலவித இடையூறு வரலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி, உடன் பணிபுரிவோரால் தொல்லைக்கு ஆளாகலாம். தொழில் செய்வோர் கீழ் வேலை செய்வோரால் நஷ்டம் அடையலாம். பெண்கள் அவமானப்பட நேரலாம். சனி வேறு வக்ரமாய் அஷ்டமத்தில். கிரஹ வலிமை, தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து இது கூடவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

அதிசாரமாய் கன்னிராசிக்கு குரு பெயரும் காலகட்டம் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். மனைவி, கணவர் மூலம் ஆதாயம் உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் குருவோடு சேர்ந்த ராகுவும் ஓரளவு நன்மை செய்யும். சனியால் கெடுதல் வந்தாலும் குரு காப்பாற்றுவார்.

திரும்ப வக்ரமாய் 6மிடத்துக்குச் செல்லும் குரு வக்ர நிவர்த்தி ஆகும் வரை கொஞ்சம் சிரமங்களைக் குறைப்பார். வக்கிர நிவர்த்தி முதல் அடுத்த ராசிக்கு போகும் வரை சங்கடங்களைச் செய்வார்.

உங்கள் இஷ்ட தெய்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் நன்மை உண்டு. தனிப்பட்ட ஜாதகம் குரு, சனி, ராகு நன்றாக இருந்தால் மேற்படி சிரம பலன்கள் குறையும்.