ஐந்தாண்டு சட்டப் படிப்பு: ஜூலை 20 முதல் 23 வரை கலந்தாய்வு

இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி 23-ஆம் தேதி வரை நடத்தப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை
சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்மையில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
 அதைத் தொடர்ந்து இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
 இந்த நிலையில், இந்தப் படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது.
 அதன்படி, கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் ஓ.சி. பிரிவினருக்கு சேர்க்கை நடைபெறும். 
 தொடர்ந்து 21- ஆம் தேதி எஸ்.டி., எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும், 22-ஆம் தேதி எம்.பி.சி., பி.சி.எம். பிரிவினருக்கும், 23-ஆம் தேதி பி.சி. பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.