பிளஸ் 2-வுக்கு பிறகு: எந்தப் பொறியியல் பாடம் ஏற்றம் தரும்?

சரியான பாடப்பிரிவைச் சரியான கல்லூரியில் தேர்ந்தெடுப்பதே கலந்தாய்வின் உண்மையான வெற்றி. கிடைக்கும் வாய்ப்புகளில் சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது சுலபத்தில் முடிந்
துவிடும். ஆனால், சிறப்பான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கும்.
பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணிசமான மதிப்பெண்கள் இருந்தால், யார் வேண்டுமானாலும் இன்றைக்குப் பொறியியல் படிப்பில் சேரலாம். தங்களின் ஈடுபாடு, ஆர்வம், தனித்திறன் எதனையும் பொருட்படுத்தாது பெற்றோர்களின் அழுத்தம் காரணமாகவே பொறியியலில் சேரும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
ஆகவே, பொறியியல் படிப்பு என்று தீர்மானித்துவிட்டால், தங்களுக்கு உகந்த பாடப்பிரிவைத் தேர்வு செய்வது என்பது மாணவரின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது.
பாடப்பிரிவு பரிசீலனைக்கு முன்
பட்டதாரியாகக் கல்லூரியை விட்டு வெளியேறும் நாளில், தான் படிக்கும் படிப்புக்கு வேலைவாய்ப்பு சந்தையில் வரவேற்பு உண்டா?, புதிது புதிதாக அறிமுகமாகும் நவீனப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாமா அல்லது அடிப்படையான பாடப்பிரிவுகளைப் படிக்கலாமா? உடற்தகுதிக்கும் பாடப்பிரிவுக்கும் தொடர்புண்டா?, குறிப்பாக, பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன?, பாடப்பிரிவைப் பொறுத்துப் படிப்பதற்கான செலவு அதிகரிக்குமா?... இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கு மாணவர்கள் விடை தேடியாக வேண்டும்.
பொறியியலில் சிறப்பான பாடப்பிரிவு எது என்பதைவிட, மாணவருக்கு உகந்த பாடப்பிரிவு எது என்பதில் தெளிவு வேண்டும். மாணவரின் பள்ளி ஆசிரியர், நண்பர்கள், கல்வி ஆலோசகர்கள், பொறியியல் பட்டதாரிகளை கலந்தாலோசித்துப் பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வரலாம்.
ஆனால், பெற்றோர் தங்களின் தனிப்பட்ட ஆசை, நிறைவேறாத குறிக்கோள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தாங்கள் எடுத்த முடிவுக்குள் தங்களின் மகனையோ மகளையோ தள்ள வேண்டாம்.
மாறாக அவர்களிடம் மனம் திறந்து பேசி, உயர்கல்வியில் எந்தத் துறையில் அவர்களுக்கு ஆர்வம், அவர்களின் இலக்குகள் எவை என்பதையெல்லாம் அறிந்து அவற்றைக் கூர்மை செய்யும் விதத்தில் பாதை அமைத்துத் தந்தால் நிச்சயம், அவர்கள் ஜெயிப்பார்கள். உண்மையில், பொறியியலில் அனைத்துப் பாடப்பிரிவுகளுமே சிறப்பானவைதான்.
தனது ஆர்வம், தனித்திறன் ஆகியவற்றோடு பொருந்தும் பாடப்பிரிவில் சிறப்பான கல்லூரியில் சேர்ந்து பயிலும் மாணவர், சொல்லியடிப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கருத்துக்கு முன்னுரிமை கொடுங்கள் அல்லது கலந்தாய்வு சேர்க்கைக்கு முன்னதாக அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
முக்கியமான படிப்புகள்
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலெக்டிரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி, கெமிக்கல் உள்ளிட்டவையே பொறியியலில் முக்கியமான பாடப்பிரிவுகள்.
இவற்றைக் குறிப்பிட்ட விகிதங்களில் கலந்தும், அவற்றிலிருந்து கிளைத்ததுமாய், புதிய பாடப்பிரிவுகள் அவ்வப்போது அறிமுகமாகிவருகின்றன. நம் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி, மனிதவளம் மற்றும் மலிவான சம்பளம் போன்ற காரணங்களால் வருகிற சர்வதேச நாடுகள், திறந்துவிடப்பட்ட அந்நிய முதலீடு எனப் பொறியியல் பட்டதாரிகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
ஆர்வமுள்ள அடிப்படை பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெறுவதும், தேவையான சிறப்புத் துறையில் பின்னர் முதுநிலைப்பட்டம் பயில்வதும் அஸ்திவாரத்தைப் பலமாக்கும் வியூகம். உதாரணமாக, கெமிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு மேற்படிப்பில் பெட்ரோ கெமிக்கல் எடுப்பது ஒரு உத்தி.
இதேபோல மெட்டலர்ஜி/மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு நானோ டெக்னாலஜி படிப்பது நல்லது. மாறாக பயொமெடிக்கல் இன்ஜினீயரிங், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது சிறப்பான வசதிகளைக் கொண்ட கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கவும், கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். சுமாரான கட்டமைப்பைக் கொண்ட கல்லூரிகளில் இவற்றைப் பயில்வது நோக்கத்தைப் பாழாக்கும்.
கிளைத்த பாடப்பிரிவுகள்
முக்கியமான பொறியியல் பாடப்பிரிவுகளிலிருந்து கிளைத்த சிறப்புப் பாடப்பிரிவுகளை அறிந்துகொள்வது, அவற்றைப் பரிசீலிக்கப் பெரிதும் உதவும்.
மெக்கானிக்கல்- ஆட்டோமொபைல், மெக்காட்டிரானிக்ஸ், டிசைன் அன்ட் மானுபாக்சரிங், தொழிலக பொறியியலும் மேலாண்மையும், மைனிங், மெட்டீரியல் சயின்ஸ், தொழிலகமும் உற்பத்தியும், ஏரோநாட்டிகல்/ ஏரோஸ்பேஸ் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினீயரிங், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்.
சிவில் ஆர்க்கிடெக்சர் இன்ஜினீயரிங், பயோ-சயின்ஸ்,பயோ- டெக்னாலஜி, கணினி அறிவியலும் தகவல் தொழில்நுட்பமும், பயோ-மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல்- மெட்டாலர்ஜிகல் இன்ஜினீயரிங், ரப்பர் அன்ட் பிளாஸ்ட்டிக் டெக்னாலஜி, பெர்ட்டிலைசர் அன்ட் கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோலியம் இன்ஜினீயரிங், பெட்ரோ ரிபைனிங் அன்ட் பெட்ரோகெமிக்கல் இன்ஜினீயரிங் என்று பெயரில் பலவகையான படிப்புகள் உங்கள் முன் உள்ளன.
மாணவிகள் கவனிக்க வேண்டியவை
பள்ளித் தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே பாய்ச்சல் காட்டுவது உண்மை. ஆனால், உயர்கல்வி என்று வந்ததும் மாணவிகளின் விருப்பங்களில் பெற்றோர் திருத்தங்கள் சொல்வதும், சில பிரிவுகளை மாணவிகள் தேர்ந்தெடுக்கச் சட்டங்கள் தடையாக இருப்பதும் நடைமுறை விநோதம்.
சில மாணவிகள் தமது இயல்புக்குப் பொருந்துவது என கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி., இ.சி.இ., எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், பயோடெக்/பயோ இன்ஜினீயரிங், கெமிக்கல் இன்ஜினீயரிங் போன்றவற்றை முதல் சுற்றில் முதன்மையாக தேர்ந்தெடுப்பார்கள்.
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்காக மாணவிகள் இவற்றுக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள். இந்த அணுகுமுறையும் உங்களுக்குப் பயன்படலாம்.
உடல்தகுதி மற்றும் பாதுகாப்பு காரணங்கள் அடிப்படையில் மரைன் மற்றும் மைனிங் இன்ஜினீயரிங் படிப்புகள் மாணவிகளுக்கு மறுக்கப்படுகின்றன. கப்பல் மற்றும் சுரங்கம் சார்ந்து பணியில் ஈடுபட அவசியமான இந்தப் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்களுக்கும் உடற்தகுதி அவசியம்.
சமரசம் தவறில்லை
சிறப்பான வசதிகளைக் கொண்ட கல்லூரியில் இடம் கிடைப்பதாக இருந்தால் பாடப்பிரிவுகளில் சிறிது சமரசம் செய்துகொள்ளலாம். அதேபோல சுமாரான கல்லூரியாக இருந்தாலும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் தரமதிப்பீடு சான்றிதழ் பெற்றிருந்தால், அவற்றையும் பரிசீலனை செய்யலாம்.
வளைகுடா நாடுகளைக் குறிவைத்து பெட்ரோலியம் சார்ந்த படிப்புகளை மேற்கொள்வது அதிகரித்திருக்கிறது. சர்வதேச அளவில் மரபுசாரா எரிபொருள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் அரசுத் திட்டங்களும் அதிகமாவதால், அதற்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இவையெல்லாம் வெளியே சென்று பணிபுரியும் சவாலுக்குத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே மேற்கொள்ளலாம். வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் தொடர்பான படிப்புகளும் இதில் சேரும்.
இதேபோலப் பொறியியல் பட்டத்துடன் முதுநிலைப் படிப்பாக அது தொடர்பான துறையின் வணிக மேலாண்மை படிப்புகளில் சமரசம் செய்துகொள்பவர்கள் தனிப்பாதையில் சிறப்பாக ஊதியம் பெறுகிறார்கள். அத்தகைய அனுபவங்களும் மாணவர்களுக்கு உதவலாம்.