மருத்துவ படிப்பில் சேருவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது



சென்னை,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது.

முதல் கட்டம் முடிந்தது

தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க 2665 இடங்கள் இருந்தன.அந்த இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வு 25-ந்தேதி முடிவடைந்தது.

இந்த கலந்தாய்வில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்.இடங்கள் அனைத்தும் நிரம்பின. மேலும் சென்னை பிராட்வே அருகே உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரியில் உள்ள 85 இடங்களும் நிரம்பின. சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்.இடங்களும் நிரம்பின.

2-வது கட்ட கலந்தாய்வு

2-வது கட்ட கலந்தாய்வு குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், மருத்துவ படிப்பில் சேருவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வும் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தான் நடைபெறும் என்றார்.

மருத்துவகல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறியதாவது:-

2-வது கட்ட மருத்துவ கலந்தாய்வுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர 6 இடங்கள் உள்ளன. சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் சேர 108 இடங்கள் உள்ளன. அரசு பல்மருத்துவ கல்லூரியில் சேர 20 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரியில் சேர 927 இடங்கள் இருக்கின்றன.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். 6 இடங்களும் பல் மருத்துவக்கல்லூரிகளில் பி.டி.எஸ். 20 இடங்களும் காலியாகி உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்ந்து எடுத்த மாணவர்கள் சேராததே இதற்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.