பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க 10 பாடங்களில் சிறப்பு பயிற்சி

விருதுநகர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட 10 பாடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த மே மாதம் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிவியல் பிரிவு மாணவர்களைவிட கலைப்பிரிவு மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறாததால் சதவீதம் குறைந்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வரலாறு, தொழிற்கல்வி பிரிவு உள்ளிட்ட ௧௦ பாடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இந்தாண்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட
உள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,:''பிளஸ் 2வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் குறைவான பள்ளிகள் குறித்த 'லிஸ்ட்' தயாரிக்கப்பட்டுள்ளது. ''சென்னையில் உள்ள மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் இப்பாடங்களில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பிற ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் கற்றல் குறைகளை கண்டறிந்து அதை அதிகப்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்படும். அதன்பின் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பர். இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது,''என்றார்.