இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவை

''இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர்,'' என, ஐ.சி.ஏ.ஐ., துணைத்தலைவர் தேவாரெட்டி தெரிவித்தார்.
சேலம், 'சார்ட்டட் அக்கவுன்ட்' பயிற்சி மையத்தில் படிப்பு முடித்தோருக்கு, சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று நடந்தது.இதில், ஐ.சி.ஏ.ஐ.,
எனப்படும், இந்திய சார்ட்டட் அக்கவுன்ட் பயிற்சி மைய துணைத் தலைவர் தேவாரெட்டி, மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கினார். பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய சார்ட்டட் அக்கவுன்ட் அமைப்பு, அரசுக்கும், மக்களுக்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை, ஆரம்பத்தில், 1,700 ஆக இருந்தது, தற்போது, 2.37 லட்சமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும், 150 பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில், எட்டு லட்சம் பேர் படித்து வருகின்றனர்.ஆடிட்டர் துறையில், வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. துபாய், குவைத், மஸ்கட், சவுதி அரேபிய நாடுகளில், 20 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர்.வெளிநாடு மட்டுமின்றி, உள்நாட்டில், ரயில்வே, நிதித்துறை, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.அதிக சம்பளம் பெறுவதற்கான வாய்ப்பு, இத்துறையில் உள்ளது. இன்னும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், நாட்டில், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர். இதை, கடினமான படிப்பு என்று கூற முடியாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.