அரசு வேலையை நம்பி இருந்த வேலையும் போச்சு! விரக்தியில் 1000 உதவி பேராசிரியர்கள்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1093 உதவி பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் :(டி.ஆர்.பி.,) சார்பில் 15.3.2012ல்,
1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பி.எச்டி., அல்லது 'நெட்', 'ஸ்லெட்' தகுதியாக வைத்து ஆசிரியர் பணி அனுபவம், உயர் கல்வி படிப்பு தகுதி மற்றும் கூடுதல் தகுதி, நேர்காணலுக்கு என தனித்தனி மதிப்பெண் வழங்கி, 'வெயிட்டேஜ்' முறையில் 25.11.2013ல் சான்றிதழ் சரிபார்ப்பும் அதை அடுத்து நேர்காணலும் நடத்தப்பட்டது.
இதன்பின் அனைத்து பாடப் பிரிவுக்குமான இறுதி தேர்வு பட்டியல் விவரம் இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. ஆனால் பணி நியமன உத்தரவுகள் இன்னும் வழங்கவில்லை. அதற்கான அறிகுறி தெரியவில்லை. உயர்கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் கூறியதாவது:
தேர்வு பட்டியல் வெளியானவுடன் அரசு பணி என்பதால் இதற்கு முன் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்த தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் பணியை ராஜினமா செய்து விட்டோம். பட்டியல் வெளியானவுடன் உத்தரவு கிடைத்து விடும் என எதிர்பார்த்தோம். நடக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, ஜாமின், விடுதலை என அடுத்தடுத்த நிகழ்ச்சிக்கு பின் உத்தரவுகள் கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். இன்னும் கிடைத்தபாடில்லை. இதனால் குடும்ப பொருளாதார சூழ்நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
டி.ஆர்.பி., தரப்பில் கேட்டால் 'கவலை வேண்டாம் விரைவில் உத்தரவு வரும்' என கூறுகின்றனர்.
இதற்கிடையே மாற்றுப்பணிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வித் துறை இதில் கவனம் செலுத்தி விரைவில் பணிநியமனம் வழங்க வேண்டும் என்றனர்.