பி.காம்., கம்ப்யூட்டர் படிப்புகளில் சேர வரிந்துகட்டும் மாணவர்கள்!

கல்லூரிகளில், புதிய கல்வியாண்டில், பி.காம்., மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்புக்கான இடங்கள், முன்கூட்டியே நிரம்பி விட்டன. வரலாறு, புவியியல் படிப்புகளுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. அதேபோல், பிளஸ் 1 வகுப்பில், காமர்ஸ் பிரிவில் சேர, மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இவற்றில் சேர முடியாதவர்களால், இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பில் சேர, கலை, அறிவியல் கல்லூரிகளில் போட்டி இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொது தேர்வில், பொருளியல் மற்றும் வணிகவியல் பிரிவு மாணவர்களே, மாநில, மாவட்ட, ’ரேங்க்’ பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்ணும், ’கிடுகிடு’வென உயர்ந்து விட்டது.
நிரம்பின:
இதனால், தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், பி.காம்., படிப்புக்கான மவுசு, இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்து விட்டது. அனைத்து கல்லூரிகளிலும், முதல்கட்ட கலந்தாய்விலேயே பெரும்பாலான இடங்கள் நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய்வில், மீதமிருந்த ஒரு சில இடங்களும் நிரம்பி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், காலை, மாலை என, இரு பிரிவிலும் பி.காம்., படிப்புக்கு, ஒரு இடம் கூட காலி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கல்லூரிகளில், முதல்வர் அறை முன்பும், கல்லூரி கல்வி இயக்குனரகம், அமைச்சர்களின் பங்களாக்கள், அரசு உயர் அதிகாரி அலுவலகம், அரசியல்வாதிகளின் வீடுகள் என, பல இடங்களிலும், பி.காம்., ’சீட்’ கேட்டு, பெற்றோர் சிபாரிசுக்கு காத்திருக்கின்றனர். எனவே, பெற்றோரிடம் உண்மையை விளக்க, ’இடங்கள் காலியில்லை’ என்ற அறிவிப்பு பலகை, பல கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், வரலாறு, புவியியல், புள்ளியியல் போன்ற படிப்புகளில் சேர, மாணவ, மாணவியர் அக்கறை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு முடித்தவர்களிலும், 400 முதல், 490 மதிப்பெண் வரை பெற்ற பெரும்பாலான மாணவ, மாணவியர், இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில், ’காமர்ஸ்’ பிரிவுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளனர். வங்கி, காப்பீடு, நிதி நிர்வாகம், பங்குச்சந்தை துறைகள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகங்களுக்கு கடும் ஆள் பற்றாக்குறை உள்ளதால், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., பேங்கிங் போன்ற படிப்புகளுக்காக, ’காமர்ஸ்’ மீது அதிக ஆர்வம் வந்துள்ளதாக, கல்வி மற்றும் நிதி நிர்வாகத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி முதல்வர்கள் வியப்பு:
சென்னை, காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி கூறியதாவது: எந்த ஆண்டும் இல்லாத வகையில், பி.காம்., படிக்க, மாணவியர் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். பி.காம்., இடம் கிடைக்காதவர்கள், ’கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்’ எடுத்துள்ளனர். மற்றவர்கள், ’எக்கனாமிக்ஸ்’ மற்றும் தமிழ், ஆங்கில இலக்கிய தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
காயிதேமில்லத் கல்லூரியில், ’கட் - ஆப்’ மதிப்பெண்படி சேர்க்கை நடந்துள்ளது. 798 முதல், 690 ’கட் - ஆப்’ வரை பெற்றவர்களுக்கு, பி.காம்., ’சீட்’ கிடைத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், மொழிப்பாடம் தவிர, நான்கு முக்கிய பாடங்களுக்கான மொத்த மதிப்பெண், ’கட் - ஆப்’ மதிப்பெண் என
கணக்கிடப்படுகிறது.
சென்னை, ராணி மேரி கல்லூரி  முதல்வர் அக்தர் பேகம் கூறியதாவது: பி.காம்., படிப்புக்கு இப்படி ஒரு மவுசை எதிர்பார்க்கவில்லை. இரண்டாவதாக, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்வு செய்துள்ளனர். அறிவியல் பிரிவில், கணித பிரிவுக்கு அதிக போட்டிஇருந்தது. அரசு பெண்கள் கல்லூரியில், எங்கள் கல்லூரியில் மட்டுமே உடற்கல்வி படிப்பு உள்ளது. இதற்கும், அதிக போட்டி இருந்தது, ஆங்கிலத் திற்கும் அதிக மாணவியர் முயற்சித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.
ராணி மேரி கல்லூரியில், பி.காம்., படிப்புக்கு, 100 இடங்கள் உள்ளன. 5,000க்கும் மேல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. சிறப்புப்பிரிவு இல்லாத மாணவி யரில், மொத்தம், 800 ’கட் - ஆப்’ மதிப்பெண்ணுக்கு, 725 வரை உள்ளவர்களுக்கு மட்டுமே, பி.காம்., கிடைத்துள்ளது.
’சீட்’டுக்கு எவ்வளவு?
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.காம்., ’சீட்’ கிடைக்காதவர்கள், தனியார் கல்லூரிகளில் சேர போட்டி போட்டு வருகின்றனர். ஒரு சில கல்லூரிகளில், சில இடங்கள், ’பிளாக்’ செய்யப்பட்டு, அதிக அளவில் நன்கொடை பேசப்படுகிறது. ஒரு, ’சீட்’டுக்கு, பல லட்ச ரூபாய் வரை, கல்லூரிகளுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படிப்புக்கான போட்டி வரிசை
* பி.காம்., பொது
*பி.காம்., கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்
*பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
*பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
*பி.எஸ்சி., கணிதம்
*பி.ஏ., ஆங்கிலம்
*பி.ஏ., எக்னாமிக்ஸ்
*பி.ஏ., தமிழ்
*பி.எஸ்சி., இயற்பியல்
*பி.எஸ்சி., வேதியியல்
*பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ்
*பி.எஸ்சி., விலங்கியல்
*பி.எஸ்சி., தாவரவியல்
* பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி
*பி.ஏ., வரலாறு
* பி.ஏ., சமூகவியல்
பி.காம்., மற்றும், ’கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்’ படிப்பில் சேர, பிளஸ் 2வில், கண்டிப்பாக, கணிதப் பதிவியல் அல்லது வணிகவியல் படித்திருக்க வேண்டும். கணினிப் படிப்புக்கு கணிதம் தேவை. மொழி இலக்கியத்துக்கு பிளஸ் 2 தேர்ச்சியில், மொழிப்பாட மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுக்கப்படும்.