வேளாண்மைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில், வேளாண்மைப் படிப்புகளில் சேர விண்ணப்பங்களை அனுப்ப சனிக்கிழமை (ஜூன் 13) கடைசி நாளாகும். 


     தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 6 படிப்புகளும், இளம் தொழில் நுட்பப் படிப்புகளில் உயிர் தொழில் நுட்பவியல், உயிர்த் தகவலியல் உள்ளிட்ட 7 படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

 இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 15ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பெற்று, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, பூர்த்தி செய்து ஜூன் 13ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில் வேளாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக மொத்தம் 32,328 மாணவ,மாணவிகள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் 27,767 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி, படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர்.
 கடந்த ஆண்டில் 47,284 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு, அதில், 31,924 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டில், விண்ணப்பங்கள் விற்பனையில் சுமார் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. 
 விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இருக்காது என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 நிறைவு செய்த விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசம் ஜூன் 13ஆம் தேதி மாலையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 20ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 29 முதல் ஜூலை 11 வரையும், 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15 முதல் 17ஆம் தேதி வரையிலும் நடைபெறும். ஜூலை 27 இல் கல்லூரிகள் தொடங்கப்படும். தேவைப்பட்டால் 3 ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.